முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 5) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவின திட்டங்கள் மற்றும் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதுபோன்று இந்த கூட்டத்தில் புதிய தொழில்முறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, “15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.34,237 கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த திட்டங்கள் மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு உதவும்” என்றார்.
மேலும் அவர், “சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, கரூர், தூத்துக்குடி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும். வரும் 13ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளிவரும்.
12 ஆம் தேதி முதலீட்டு செயலாக்க மாநாடு நடைபெற உள்ளது.
‘கேயன்ஸ் சர்க்கியூட் லிமிடெட் நிறுவனம் பிசிபி , கேமரா மாடியூல்ஸ், மற்றும் லேமினேட்ஸ் போன்ற மேம்பட்ட உற்பத்திப் பணிகளைத் தொடங்கவுள்ளது.
‘ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம் வாகன மின்னணு உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யவுள்ளன.
‘எவர்வே கொத்தாரி ஃபுட்வேர்’ நிறுவனம் மூலம் உலகப்புகழ் பெற்ற ‘அடிடாஸ்’ பிராண்ட் உற்பத்தி தமிழ்நாட்டிற்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
‘ஜோனஸ்’ நிறுவனம் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் ரேடார் அமைப்புகள், ஏவுகணை பாகங்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்யவுள்ளது.
தூத்துக்குடியில் ‘ஜெட்சால்’ நிறுவனம் சோலார் செல்களை உற்பத்தி செய்ய உள்ளது” என்று கூறினார்.
