சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) காலை வரை விடிய விடிய மழை பெய்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வளசரவாக்கம், வடபழனி ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.