பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கோவை வரும் நிலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கோவை கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு வரும் 19-ம் தேதி புதன் கிழமை தொடங்க உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் பங்கேற்க பிரதமர் மோடி புதன்கிழமை மதியம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் வந்து விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட உள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யதுள்ளனர். பிரதமர் கலந்து கொள்ளும் விழா நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட இருக்கிறது. விமானநிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக கோவை விமானநிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்பு இரவு நேரத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராத கட்டணம் வசூலிக்கப்படும். செவ்வாய் கிழமை காலை 6 மணி முதல் 19-ம் தேதி மாலை 6 மணி வரை விமானநிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்னால் வாகனங்களை நிறுத்த கூடாது .
அதேநேரத்தில் முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்த தடையும் இல்லை.செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை பயணிகள், தங்களது வாகனங்களை , வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , “பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது . வரும் 19 ம் தேதியன்று
பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஏர்போர்ட் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளன. 19ம் தேதி பிரதமர் வருகையை முன்னிட்டு பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விமான நிலையத்திற்குள் வாகனங்கள் மற்றும் கால் டாக்சிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதே சமயம் 12 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 19 ம் தேதி ஜிடி நாயுடு மேம்பாலம் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மூடப்படும். வாகன ஓட்டிகள் அதற்கு ஏற்றபடி பாதைகளை பயன்படுத்தலாம். வரும் 19ம் தேதி காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
