‘அறிவு’ இருப்பதால் ‘அறிவுத் திருவிழா’ நடத்துகிறோம்.. விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

Published On:

| By Mathi

DMK Udhayanidhi Stalin

தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அறிவுத் திருவிழா (Arivu Thiruvizha) நடத்தப்பட்டது என திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற அறிவுத் திருவிழா இறுதி நாள் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரை:

ADVERTISEMENT

முற்போக்குப் புத்தகக் காட்சியில் முழுக்க முழுக்க அரசியல் புத்தகங்களை மக்கள் பார்வையிட்டு வாங்கி இருக்கின்றனர். கடந்த 9 நாட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்து, ரூ.35 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றனர். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகம் 1,500 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. முன்பதிவு திட்டத்தில் 7,000 படிகள் விற்பனையாகின.

ராசி இல்லாத இடம்

ADVERTISEMENT

வள்ளுவர் கோட்டம் என்றால் ராசி இல்லாத இடம் என்பார்கள். அறிவுத்திருவிழா நடத்த நான் இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அறிவுத்திருவிழாவிற்கும் ராசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நினைப்பவன் நான்.

கலைஞர் பதவியேற்ற இடம்

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு, கலைஞர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள தேர்வு செய்த இடம் வள்ளுவர் கோட்டம்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைபோல், ஆண்டுதோறும் வெவ்வேறு மாவட்டங்களில் அறிவுத்திருவிழா நடத்தப்படும்.

அறிவுத் திருவிழா ஏன்?

அறிவுத்திருவிழா ஏன் என பலர் கேள்வி எழுப்பினார்கள், எப்படி நீங்க அறிவுத் திருவிழா நடத்தலாம் என கேட்கிறார்கள்.. யாரை கேட்டு நடத்துறீங்க? எதற்காக நடத்துறீங்க? என்கிறார்கள்.

விஜய்க்கு பதிலடி

அறிவு இருக்கிறவன் அறிவுத் திருவிழா நடத்துறான்.. அறிவுத் திருவிழாவில ‘அவங்களை’ விமர்சித்து பேசிவிட்டோம் என கோபம் வேற (விஜய்).. போலீஸைப் பார்த்தா திருடனுக்கு பயம் வருகிற மாதிரி அறிவுங்கிற வார்த்தையை கேட்டாலே அவங்களுக்கு அலர்ஜி சுகாதார மேம்பாட்டை பற்றி பேசுனா கிருமிகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அது போல அறிவுத் திருவிழாவில் கொள்கைகளைப் பற்றி பேசும் போது கொள்கையற்ற கும்பலின் ஆபத்து பற்றியும் இங்கே சில பேர் பேசியிருக்காங்க..

இளைஞர்களை அரசியல்படுத்த

தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்டதுதான் தி.மு.க அறிவுத்திருவிழா. திமுக இளைஞரணியினர் நிறைய படிக்க வேண்டும். அனைவரின் கருத்துகளையும் தெரிந்து கொண்டு, அதற்கு பதிலடி தரும் வகையில் நம் அறிவை வளர்க்கவும், ஆற்றலை பெருக்கவும் வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம்

நாட்டில் சில தலைவர்கள், தங்களது தொண்டர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. தொண்டர்கள் அரசியல் தெளிவு பெற்றால் அரசியல் செய்ய முடியாது என நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, அ.தி.மு.க தொண்டர்களுக்கு கொள்கைகள் எதுவுமே தெரியாது. தி.மு.க.வை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க.வின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது.

அப்படியான கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொள்கையை மட்டும் மறக்கவில்லை. தனது தலைவரையும் மறந்துவிட்டார். சமீபத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையிட்டுவிட்டு, அண்ணாவிற்கு மரியாதை செலுத்தியிருக்கிறேன் என பேட்டியளிக்கிறார் பழனிசாமி. இதுதான் அ.தி.மு.க.வின் நிலைமை.

SIR ஏன்?

நாட்டில் எதிர்க்கட்சிகளை முடக்க இன்றைக்கு தேர்தல் ஆணையமே S.I.R வேலையில் ஈடுபட்டிருக்கிறது.தேர்தலையே திருட்டுத்தனமாக நடத்துவதற்கு முனைந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதனை நாம் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அறிவுத் திருவிழா

திமுக இளைஞரணி சார்பில் திமுகவின் 75–ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8-ந் தேதி தொடங்கி நவம்பர் 16-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த அறிவுத் திருவிழாவை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அறிவுத் திருவிழாவை முன்னிட்டு கருத்தரங்குகள் நடைபெற்றன. ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யும் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

அறிவுத் திருவிழா குறித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், திமுக 75 அறிவுத் திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்!

வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.

குறிப்பாக, ‘Carry on, but remember’ எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்.

வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது திமுக இளைஞரணி தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா! என தெரிவித்துள்ளார்.

அறிவுத் திருவிழா குறித்த விஜய் விமர்சனம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நவம்பர் 12-ந் தேதி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா? யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்? ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்? சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை? அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?” என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share