கோவை மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் பேருந்துகள் இன்று (ஆகஸ்ட்-12) முதல் 90 நாட்களுக்கு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநகரில் இருக்கும் பரபரப்பான சாலைகளில் கோவை – மேட்டுப்பாளையம் சாலையும் ஒன்று. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் பெரியநாயக்கன் பாளையம், கவுண்டம் பாளையம் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சாய்பாபா காலனி பகுதிகளில் புதிய மேம்பால கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகள் இன்று முதல் மாற்றுபாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- காந்திபுரம், பூமார்க்கெட், வடகோவை, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து கனரக வாகனங்களும் வடகோவை அவினாசிலிங்கம் கல்லூரியிலிருந்து இடது புறம் திரும்பி, பாரதி பார்க் ரோடு வழியாக சென்று GCT கல்லூரி ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி. தடாகம் சாலை வழியாக, வெங்கிட்டாபுரம், கோவில் மேடு, இடையர்பாளையம் சென்று, அங்கிருந்து கவுண்டம்பாளையம் சாலையை அடைந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.
- கவுண்டம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து இலகு ரக மற்றும் கனரக வாகனங்களும் வழக்கம் போல் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
- காந்திபுரம், அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் நல்லாம்பாளையம் வழியாக கணபதியை அடைந்து, காந்திபுரம் வழியாக செல்லலாம். சங்கனூர் சந்திப்பிலிருந்தும் இடது புறம் திரும்பி. கண்ணப்ப நகர் புதுப்பாலம் வழியாக சிவானந்தா காலனியை அடைந்து காந்திபுரம் வழியாக செல்லலாம்.
- காந்திபுரம், சிவானந்தா காலனியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் ARC சந்திப்பில் இடது புறம் திரும்பி. கங்கா மருத்துவமனை, அழகேசன் ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி, அழகேசன் ரோடு வழியாக தடாகம் சாலையை அடைந்து வெங்கிட்டாபுரம், கோவில்மேடு. இடையர்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் தடாகம் சாலை வழியாக செல்லலாம்.
- NSR ரோடு வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் உட்பட அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் NSR ரோடு, ஸ்டேட் பேங்க் சந்திப்பில் வலது புறம் திரும்பிட ராஜா அண்ணாமலை ரோடு வழியாக பாரதி பார்க் ரோடு சென்று. இடது புறம் திரும்பி அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.