இந்தியாவுடனான வர்த்தக உறவில் அமெரிக்காவுக்குதான் ஒருதலைபட்சமான பேரழிவு ஏற்படுகிறது என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கொந்தளித்துள்ளார்.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அத்துடன் ரஷ்யா அதிபர் புதினையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த உடனேயே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கங்களில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கு அமெரிக்கா குறைந்த அளவே ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இந்தியாதான் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. அதாவது இந்தியாதான் நமக்கு அதிகமான பொருட்களை விற்பனை செய்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய வாடிக்கையாளரும் அமெரிக்காதான். இந்தியாவிடம் நாம் குறைவாகத்தான் விற்பனையும் செய்கிறோம்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு ஒருதலைபட்சமாகவே இருக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. இது ஒருதலைபட்சமான பேரழிவு.
ரஷ்யாவிடம் இருந்துதான் அதிகமான ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்தியா வாங்குகிறது. அமெரிக்காவிடம் இருந்து இவற்றை மிக குறைவாகவே இந்தியா வாங்குகிறது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை விலக்க இந்தியா காலதாமதமாக முன்வந்தது. இப்படி ஒரு முடிவை இந்தியா முன்னரே- பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்திருக்க வேண்டும். இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
