தக்காளி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் சென்னையில் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாகவே ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ரூ.45 – 55 வரை விற்பனை செய்யப்படுகிறது. முதல் தரம் ரூ.55க்கும், இரண்டாம் தரம் 50 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் தக்காளி விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
“இதனால் வழக்கமாக ஒரு கிலோ தக்காளி வாங்கினால் தற்போது அரை கிலோ மட்டுமே வாங்குவதாகவும், தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனினும் தக்காளி விளையும் பகுதிகளில் தொடர் மழை பெய்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு விலை குறை வாய்ப்பு இல்லை என்கிறார்கள் வியாபாரிகள்.
முன்னதாக, தினசரி 1300 டன் தக்காளி இறக்குமதி செய்யப்படும். ஆனால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து 800 முதல் 900 டன்னாக குறைந்துள்ளது என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
தக்காளிக்கு போட்டியாக கேரட் (ரூ.55),கொத்தவரை (ரூ.68), கத்திரிகாய் (ரூ.90),பச்சை பட்டாணி (ரூ.120) குடைமிளகாய் (ரூ.130) ஆகிய காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ பூண்டு ரூ.300 – 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களால் காய்கறிகள் வாங்க முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.