அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக அரசுக்கு துணையாக இருங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Published On:

| By Mathi

Jaacto MK Stalin

திமுக அரசுக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் துணை நிற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் – ஆசிரியர்களின் – அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது.

ADVERTISEMENT

திராவிட மாடல் அரசுக்கு நற்பெயரும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பெருமையில் பெரும்பங்கு அரசு ஊழியர்களான உங்களுக்குதான் இருக்கிறது! அதற்கான எங்களின் நன்றியை சொல்வதற்கான வாய்ப்பாக, இந்த மாநாட்டை நான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்! இந்த மேடையில் நின்று, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நன்றியை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை 22 ஆண்டுகளாக நீங்கள் வைத்துகொண்டு இருக்கிறீர்கள்! யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில்! அப்போது, நீங்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? வியர்வைத்துளி சிந்தி உழைத்த உங்களுக்கு இரத்தக்கண்ணீரை வர வைத்ததுதான், கருணையில்லா அ.தி.மு.க. ஆட்சி! ஆனால், இது அனைவரையும் அரவணைக்கும் கருணையே வடிவான தி.மு.க. ஆட்சி!

ADVERTISEMENT

உங்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், தமிழ்நாட்டின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரீசிலனை செய்துதான், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” அறிவித்தோம்!

எங்களை பொறுத்தவரைக்கும், சொன்னதைச் செய்வோம்! சொல்வதைத் தான் செய்வோம்! செய்து, உங்களின் பாராட்டுகளை பெறுவோம்! நான் உறுதியாக சொல்கிறேன். உங்களின் கோரிக்கைகள் – கனவுகள் – எதிர்ப்பார்ப்புகளை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்! உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share