நா.மணி
எல்லோரும் ஓர்குலம்,
எல்லோரும் ஓரினம்,
எல்லோரும் இந்தியமக்கள்,
எல்லோரும் ஓர்நிறை,
எல்லோரும் ஓர்விலை,
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்..
என்ற பாரதியின் வரிகள் முற்றிலும் பொருந்துவது தேர்தல் வாக்களிப்பு என்ற புள்ளியில் மட்டுமே. இந்தப் புள்ளியே ஜனநாயகத்தின் தொடக்கப் புள்ளி. எனவே, அறிவியல் பூர்வமான தேர்தல் விழிப்புணர்வு ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமை. ஜனநாயக நாட்டின் உயிர்நாடி தேர்தல். இந்தியா போன்ற பெரிய, பல மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் தேர்தல் என்பது வெறும் அரசைத் தேர்ந்தெடுக்கும் செயல் மட்டும் அல்ல. சமூக நீதியையும், சமத்துவத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் செயல். எனவே, ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பாங்குடன் தேர்தலை அணுக வேண்டும்.
அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஏன்?

இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.
இது ஒரு அரசியல் உரிமை. ஒரு சமூகப் பொறுப்பு. வாக்களிக்காத குடிமகன் ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழும் உரிமையை தார்மீக ரீதியாக இழக்கிறான். தனது குரலை இழக்கிறான். “மக்கள் ஆட்சி” என்ற சொல்லுக்கு அனைவரும் வாக்களிக்கும் போதே மகத்துவம் சேர்கிறது. எனவே, ஒவ்வொருவரும் வாக்களிப்பது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நேரடியாக பங்கெடுப்பதற்கு சமம் என்ற உணர்வு வேண்டும்.
காசுக்கு ஓட்டு – ஜனநாயகத்தின் அழிவு

“காசுக்கு ஓட்டு” என்பது வெறும் ஒழுக்கக்கேடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படையை அழிக்கும் செயல். பணம் வாங்கி வாக்களிக்கும் போது, தேர்தல் தேர்வு என்பதெல்லாம் பொய்யான தகவலாகி விடுகிறது. உடனடி லாபத்திற்கு தன்னையே விற்பதற்கு ஒப்பாகி விடுகிறது. நாட்டின் ஜனநாயக செயல் முறைகளுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆகிவிடுகிறது. இதன் விளைவுகள் நம் எல்லோருக்கும் அறிந்ததே. லஞ்சம், ஊழல் பன்மடங்கு அதிகரிக்கும். நல்ல திட்டங்கள், நல்ல ஆட்சி என்று சொன்னாலும், லஞ்சம், ஊழல் மீதே கண்கள் குத்திட்டு நிற்கும். பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படும். ஒரேயொரு நாள் குடிமக்கள் வாங்கும் லஞ்சம், ஐந்து ஆண்டுகள் லஞ்சம் வாங்க உரிமம் தரும் செயலுக்கு ஒப்பானது.
ஒரு நாளுக்கான பணத்திற்காக, ஐந்து ஆண்டுகளுக்கான நம் உரிமையை இழக்கக் கூடாது. ஒரு நாள் ஒரு ஓட்டுக்கு வாங்கும் லஞ்சம் 1825 நாட்களில் கட்டுக்கடங்காத லஞ்சம் வாங்க அனுமதி வழங்கும் செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வகுப்புவாதம் நாட்டின் மிகப்பெரிய ஆபத்து
இந்தியா பல மதங்களும், பல மொழிகளும், பல கலாச்சாரங்களும் கொண்ட நாடு. நமது வலிமை “வேற்றுமையில் ஒற்றுமை”. அந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் பணியே மத அடிப்படையிலான அரசியல். மதவாத அரசியல் சமூக ஒற்றுமையை சிதைக்கும். வெறுப்பை விதைக்கும். வளர்ச்சியை தடை செய்யும். எனவே, மத மற்றும் வகுப்புவாத அரசியலை உறுதியாக நிராகரிக்க வேண்டும்.
ஒரே நாடு – ஒரே தேர்தல்

அறிவைப் பயன்படுத்தவில்லை என்றால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” ஒப்புமையற்ற அழகான முழக்கம். ஆனால், கொஞ்சம் அறிவைப் பயன்படுத்தி பின்னோக்கி திரும்பிப் பார்ப்போம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் தானே? எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தானே தேர்தல் நடந்தது? பிறகு ஏன் அது மாறியது? அதுதான் ஜனநாயகம். இப்போது நான்கு மாநிலங்களில் ஒரு சேர தேர்தல் நடக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த நான்கு மாநிலங்களில் ஒரு சேர தேர்தல் நடக்கும் என்பதில் என்ன உத்திரவாதம்? ஒரு மாநிலத்தில் ஓர் அரசு கவிழ்ந்து விட்டது என்றால், புதிதாக தேர்தல் நடத்தித் தானே ஆக வேண்டும். ஆறு மாதத்தில் ஒரு மாநில அரசு கவிழ்ந்து விட்டால், மீதமுள்ள நான்கரை ஆண்டுகள் ஆளுநர் ஆட்சி என்றால் என்ன அராஜகம்? அது கூட்டாட்சி அமைப்பின் தனித்துவத்தை பாதிக்கும்.
மாநிலங்களின் பிரச்சினைகள், தேவைகள் வேறுபட்டவை. அவற்றின் குரல் தனித்த தேர்தல்களால் வெளிப்படுகிறது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை கொண்டவர்கள் மக்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள். அவர்களை நிராகரிக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை சரியில்லை என்பதற்கு ஒற்றை அளவுகோல் என்ன? இந்தியா என்ற நாடு தோன்றியது முதல் இப்படி ஒரு கல்விக் கொள்கை எதிர்ப்புக்கு உட்படவில்லை. அறிவியல் பூர்வமான ஓர் விமர்சனத்தை முன்வைத்து சில கேள்விகளை எழுப்புவோம்.
புதிய கல்விக் கொள்கை சமத்துவத்தை உறுதி செய்கிறதா?
உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கிறதா?
ஏழை, பின்தங்கிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு தருகிறதா?
என்பதை ஆராய்ந்து பாருங்கள். புதிய கல்விக் கொள்கை, மூன்று C-களில் சுருக்கி விடலாம் என்கிறார்கள்…
Communalisation, Commercialization, Corporatisation
கல்வியை வகுப்புவாதமயமாக்குதல்
கல்வியை வணிகமயமாக்குதல்
கல்வியை கார்ப்பரேட்மயமாக்குதல்
இதுவரை பள்ளி பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்ட பகுதிகள் வகுப்புவாதமயமே புதிய கல்விக் கொள்கை என்பதற்கு சான்று. கல்வி வணிகமயம் எப்படி சொல்வீர்கள்? நீட் வந்த பிறகு எந்த சாதி, எந்த மதமாக இருந்தாலும், பணக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க செல்கிறார்கள். 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டையும், ஓரிரு விதிவிலக்குகளையும் மறந்து விடுங்கள். எனவே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்களை, அந்தக் கூட்டணியை புறந்தள்ளிவிட வேண்டும்.
ஒரே நாடு – ஒரே கலாச்சாரம்

இந்தியாவுக்கான மிகப் பெரிய அச்சுறுத்தல். “ஒரே நாடு – ஒரே கலாச்சாரம்” இந்தியாவின் அடிப்படை அடையாளத்திற்கே முரண்பட்டது.
இந்தியா என்பது என்ன?
பல மொழிகள்
பல உணவு முறைகள்
பல வாழ்வியல் முறைகள்
பல தெய்வங்கள்
பல வழிபாட்டு முறைகள்
பல்வகை பழக்க வழக்கங்கள்
பல்வகை கலாச்சாரம்
இவற்றின் சங்கமம் இந்தியா. இந்த பல்வகைமையை அழிக்கும் எந்த முயற்சியையும் ஜனநாயக ரீதியாக எதிர்க்க வேண்டும். இதனை ஆதரிப்போரை நிராகரிப்பது அறிவியல் பூர்வமான சிந்தனை.
வெறுப்பு அரசியல்
வெறுப்பு, பயம், பகைமை ஆகியவற்றை அரசியல் கருவியாக பயன்படுத்தும் சக்திகளுக்கு வாக்களிக்கக் கூடாது. வெறுப்பு அரசியல் சமூக அமைதியை குலைக்கும். மக்கள் இடையே நம்பிக்கையை சிதைக்கும். அறிவியல் சிந்தனை கொண்ட வாக்காளர்கள் இத்தகைய அரசியலை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
பெண்கள் சமத்துவம்

பெண்களை சமமாக நடத்தாத சமூகமும், அரசியலும் முன்னேற்றம் அடைய முடியாது. எனவே, பெண்களின் உரிமைகளை மதிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் அரசியல் சக்திகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும்.
லஞ்சம் வகுப்புவாதம் ஒப்பீட்டு மதிப்பீடு
லஞ்சம் மற்றும் ஊழல் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்பது உறுதி. ஆனால், அவற்றைக் காட்டிலும் வகுப்புவாதம் ஆழமான, நீண்டகால ஆபத்தை உருவாக்கும். எப்படி?
தனிநபர் தீமையா? சமூகத் தீமையா?
லஞ்சம், ஊழல் தனிநபர் அல்லது நிர்வாகத் தவறுகள்.
வகுப்புவாதம் முழு சமூகத்தை கூறுபோட்டு விடும். ஒற்றுமையுடன் வாழும் மக்களை பிரிக்கும். மக்களுக்குள் பகை உருவாக்கும். வகுப்புவாதம் சமூகத்தின் அடித்தளத்தையே அசைத்து விடும்.
சரிசெய்யும் சாத்தியம்
ஊழல் சட்டம், கண்காணிப்பு, விழிப்புணர்வு மூலம் கட்டுப்படுத்தலாம்.
வகுப்புவாதம் மனநிலையை மாற்றுவது கடினம். வகுப்புவாத தீ மூட்டப்பட்டால் அடக்க பல தலைமுறைகள் ஆகும்.
நம்பிக்கை சிதைவு
லஞ்சம் அரசு அமைப்பின் மீது நம்பிக்கை குறையும்.
வகுப்புவாதம் மனிதன் மனிதனை நம்பாத நிலைக்கு தள்ளிவிடும்.
வன்முறைக்கு வழிவகை

ஊழல் பொருளாதார இழப்புகளை உருவாக்கும்.
வகுப்புவாதம் கலவரம், உயிரிழப்பு, குடியுரிமை சிதைவை உருவாக்கும்.
அரசியல் பயன்பாடு
ஊழல் தனிநபர் லாபம் சார்ந்தது.
வகுப்புவாதம் மக்களைப் பிரித்து ஆட்சி பிடிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஊழல் வளர்ச்சியை தடை செய்கிறது. வகுப்புவாதம் நாட்டின் ஒற்றுமையையே உடைக்கிறது.
இதனால் நாட்டின் குன்றாத வளர்ச்சி குன்றிப் போகும்.
லஞ்சம், ஊழல் என்பது உடலில் ஒரு நோய் போன்றது; வகுப்புவாதம் உடலையே அழிக்கும் விஷம் போன்றது.
ஊழலை எதிர்ப்பதோடு சேர்த்து, வகுப்புவாதத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
லஞ்சமா? வகுப்புவாதமா? என்ற நிலை வந்தால், லஞ்ச ஊழல் என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானது.
வகுப்புவாதத்தையே முதலில் தோற்கடிக்க வேண்டும்.
சமூக முன்னேற்றத்திற்கும் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும் அதுவே அவசர அவசியம்.
முடிவுரை

தேர்தல் என்பது ஒரு நாளின் நிகழ்வு அல்ல; அது ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் செயல்முறை.
அறிவியல் சிந்தனை, சமூகப் பொறுப்பு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாக்களிக்கும் போது மட்டுமே உண்மையான ஜனநாயகம் நமக்கு வாய்க்கும்.
“என் ஓட்டு – என் உரிமை மட்டுமல்ல; என் நாட்டின் எதிர்காலம்” என்ற உணர்வுடன் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன், அறிவியல் பூர்வமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

நா.மணி, பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
