திருப்பூரில் முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் நாள்தோறும் சுமார் 700 டன் குப்பைகள் சேரும் நிலை உள்ளது. இதை அகற்ற எஸ்.டபிள்யூ. எம்.எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களில் பலருக்கு முறையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கமாக 6ம் தேதி வழங்க வேண்டிய சம்பளம் தற்பொழுது வரை வழங்கப்படவில்லை. மேலும் தீபாவளிக்கான போனஸ் குறித்து இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. எனவே மாதம் தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் உரிய சம்பளத்தை வழங்க வேண்டும், தீபாவளி போனஸும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் உள்ள நான்கு மண்டலங்களில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தங்கள் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 10) தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறன்றனர். இதனால் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்களின் வலியுறுத்தி வருகின்றனர்.