வடகிழக்கு பருவமழை தீபாவளிக்கு முன்னதாக வரும் 16 முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை நேற்று வெளியிட்ட வாராந்திர வானிலை அறிக்கையில், ”தென்மேற்கு பருவமழை, வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள், இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை வரும், 16 முதல் 18 ம் தேதிக்குள் துவங்குவதற்கான சாத்தியம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் கனமழை!
அதேபோன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
