‘காதலுக்காக’ 14 பேரை சுட்டுக் கொன்றாரா பிரபாகரன்? திருமாவளவன் விளக்கம்

Published On:

| By Mathi

THirumavalavan

தமது ஜாதி மறுப்பு காதலுக்காக 14 பேரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சுட்டுக் கொன்றதாக தாம் பேசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் கூறியுள்ளதாவது: அண்மையில் 23-01-2026 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள சர் பிட்டி. தியாகராயர் அரங்கில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் பங்கேற்று உரையாற்றினேன். அப்போது தமிழ்த் தேசியம் குறித்தும் தமிழீழத் தேசிய விடுதலை அரசியல் குறித்தும் பேசினேன். தமிழீழத் தேசிய விடுதலையானது சமூக விடுதலையையும் உள்ளடக்கமாகக் கொண்ட அரசியல் விடுதலை என்பதே அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களின் கொள்கை நிலைப்பாடு என விளக்கினேன். அதனையொட்டி அவர் முன்னெடுத்த அரசியல் உத்திகளையும் அவை தொடர்பான அவரது அணுகுமுறைகளையும் சுட்டிக் காட்டி உரையாற்றினேன். தமிழீழத் தேசிய விடுதலைக்கான களத்தில் சாதி, மதம் ஆகியன பற்றிய அவரது பார்வை மற்றும் அவரிடம் மேலோங்கியிருந்த புரட்சிகர – சனநாயக- முற்போக்கு சிந்தனைகள் குறித்து விவரிக்க முனைந்தேன்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து, 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் வன்னியில் நான் அண்ணன் அவர்களைச் சந்தித்து உரையாடியது குறித்துப் பேசும்நிலை வந்தது. குறிப்பாக, 2002 ஆம் ஆண்டு யாழ்நகரிலுள்ள வீரசிங்க மண்டபத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் ஒருங்கிணைத்த “மானுடத்தின் தமிழ்க்கூடல்” என்னும் வரலாற்று நிகழ்வில் ‘சாதியற்ற தமிழீழம்’ தொடர்பாக நான் உரையாற்றியதையும்; உடனடியாக கவிஞர் அவர்கள் அதற்கு விடையளித்துப் பேசியதையும்; அதன்பின்னர் வன்னியில் அண்ணன் பிரபாகரன் அவர்களைச் சந்தித்ததையும் நினைவுகூர்ந்தேன்.

‘நிதர்சனம்’ என்கிற ஊடக அமைப்பின் பொறுப்பாளர் தோழர் சத்தியமூர்த்தி என்கிற சேரலாதன் அவர்களுடன் ஒருநாள் அதிகாலையில் முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து கிளிநொச்சிக்கு இருசக்கர வண்டியில் சென்று அண்ணன் தமிழேந்தி அவர்களின் இல்லத்தில் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது, அவர் தமிழ்நாட்டில் திண்ணியம் என்னும் ஊரில் நடந்த சாதிய அவலம் குறித்து மிகுந்த வேதனையோடு தனது குமுறலை வெளிப்படுத்தினார். அத்துடன், தமிழீழத்தில் நிலவும் சாதியச் சிக்கல்கள் குறித்தும் தனது திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசினார்.

ADVERTISEMENT

“இயக்கத்தில் சாதிய உணர்வுகளுக்கு இடமே இல்லை. இயக்க வளர்ச்சியின் போக்கில் முற்றாக அவை உதிர்ந்து போயின. ஆனால், சமூகத்தில் அவ்வப்போது சாதியச் சிக்கல்கள் எழும்போது உடனே இயக்கம் தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சில வேளைகளில் தேவையான சூழல்களில் இயக்கம் சாராத சிலருக்குத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் அத்தகைய நிலைமைகள் இயக்கத்தின் கட்டுக்குள் உள்ளன.” -என்று அண்ணன் பிரபாகரன் அவர்கள் என்னிடத்தில் கூறினார். இதனை அன்றைய த.பெ.தி.க கூட்டத்தில் நான் பேசும்நிலை தன்னியல்பாக நிகழ்ந்தது.

அண்ணன் பிரபாகரன் அவர்கள் பெரியாருக்கு எதிரானவர் இல்லையென்றும்; பெரியாரைப் போலவே சாதியச் சமூகக் கட்டமைப்புக்கு எதிரானவர் என்றும் விவரித்துப் பேசுவதே எனது முனைப்பாக இருந்தது. அதனையொட்டி அண்ணனின் சாதிமறுப்புத் திருமணம் பற்றியும், சாதிய சிக்கல்கள் தொடர்பாக இயக்கத்தின் சார்பில் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பேசினேன். ஆனால், அண்ணன் பிரபாகரன் அவர்கள் ‘சாதியத்தை எதிர்த்தார்’ என்பதற்கு மாறாக, ‘காதலுக்காகத் தண்டனை வழங்கினார்’ என பொருள்படும்படி எனது உரை அமைந்தது ஒரு பிறழ்வே தவிர வேறேதும் இல்லை.

ADVERTISEMENT

‘திராவிடம் என்னும் கருத்தியலுக்கும் தந்தை பெரியாருக்கும் அண்ணன் பிரபாகரன் அவர்கள் எதிராக இருந்தார் என்றும்; அவர் சொல்லித்தான் பெரியாரை எதிர்க்கிறோம் என்றும்; ‘தமிழர் தலைவர்’ என்னும் பெரியாரின் பிம்பத்தைச் சிதைக்கிறோம் என்றும்’ இங்கே ஒரு கருத்துருவாக்கம் செய்யப்பட்டு அது வலுவாகப் பரப்பப்பட்டு வருகிறது. இது அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களின் மீதான நன்மதிப்புக்கு தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கவலை மேலோங்குகிறது.

இந்நிலையில்தான், ‘அண்ணன் பிரபாகரன் அவர்கள், பெரியாருக்கோ அவரது சமூகநீதி சிந்தனைகளுக்கோ எதிரானவர் இல்லை’ என்று வலியுறுத்தவே நான் அண்ணன் அவர்களின் திருமணம் மற்றும் சாதியமைப்புக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்தும் பேசினேன். மற்றபடி, அவரது மகத்தான ஈகத்துக்கும் மாபெரும் வீரத்துக்கும் ஊறு விளைவிக்கும் நோக்கில் ஒருபோதும் நான் சிந்தித்ததுமில்லை; பேசியதுமில்லை.

“உங்களுக்காக இங்கே அண்ணன் நான் இருக்கிறேன்; அங்கே நீங்கள் தைரியமாகப் போராடுங்கள்” என்று என்னை ஆரத்தழுவி அன்று வாழ்த்தி வழியனுப்பி வைத்த எனது ஆருயிர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப்பற்றி வேறு பொருள் கொள்ளும் வகையில் ‘உரை பிறழ்வு’ நேர்ந்தமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share