மாதத்தின் முதல் வாரத்தில் பணம் தாராளமாகப் புழங்கும் என்பது பலரது நம்பிக்கை. நிச்சயம் அது மூடநம்பிக்கை ஆகிவிடாது என்ற எண்ணத்தில் முதலிரண்டு வாரங்களில் வசூல் அள்ளத் துடிப்பது திரையுலகின் வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் சுமார் ஆறு படங்கள் தமிழில் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. this week theater release june 4
அஃகேனம்
2021இல் வெளியான ‘அன்பிற்கினியாள்’ படத்தில் மகள் கீர்த்தி பாண்டியன் உடன் இணைந்து நடித்ததுடன், அதனைத் தயாரித்திருந்தார் அருண் பாண்டியன். மீண்டும் கீர்த்தி – அருண் இணைந்து நடித்திருக்கிற படம் ‘அஃகேனம்’. இதனை கவிதா பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
இதில் சீதா, ஆதித்யா ஷிவ்பிங், பிரவீன் ராஜா, ஜி.எம்.சுந்தர், நம்ரிதா, ஆதித்யா மேனன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புதுமுகமான உதய்குமார் இதனை இயக்கியிருக்கிறார். பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் நீளம் 133 நிமிடங்கள்.
பறந்து போ
இயக்குனர் ராமின் ஐந்தாவது படைப்பாக இது வெளியாகிறது. மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் ஜேசுதாஸ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரெயான் ஆகியோருடன் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி மற்றும் அஜு வர்கீஸ் இதில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசை அமைத்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. இப்படத்தின் நீளம் 132 நிமிடங்கள்.
3பிஹெச்கே
‘எட்டு தோட்டாக்கள்’ தந்த ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் படமிது. ’வருஷங்களுக்கு சேஷம்’ படத்தில் அறிமுகமான அம்ரித் ராம்நாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார், யோகிபாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படத்தின் நீளம் 140 நிமிடங்கள்.
பீனிக்ஸ் வீழான்
விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகும் படமிது. பிரபல சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு இப்படத்தின் வழியே முதல்முறையாக இயக்குனர் ஆகியிருக்கிறார். தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், முத்துகுமார், திலீபன், அபிநட்சத்திரா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் நீளம் 120 நிமிடங்கள்.
அனுக்கிரகன்
விஜய் கிருஷ்ணா, முரளி ராதாகிருஷ்ணன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், தீபா உமாபதி, ராகவன் முருகன், கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கியிருக்கிறார். ரேஹான் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி வகைமையில் இப்படம் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் நீளம் 123 நிமிடங்கள்.
குயிலி
அம்மா, மாமியார், சித்தி வேடங்களில் நடித்து வருகிற லிஸி ஆண்டனி கதை நாயகியாக நடித்துள்ள படமிது. தஷ்மிகா லக்ஷ்மண், புதுப்பேட்டை சுரேஷ், ஹலோ கந்தசாமி, ராட்சசன் சரவணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். பி.முருகசாமி இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ஜு ஸ்மித் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் நீளம் 107 நிமிடங்கள்.
இவை போக ’இரவுப்பறவை’ என்ற தமிழ் படமும் வரும் ஜூலை 4 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த வாரமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிழல்கள் ரவி, நந்தினி உதயகுமார், ராகவி ராஜ்குமார், பகவதி பாலா, ஜெய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை வேதாஜி பாண்டியன் இயக்கியிருக்கிறார்.
ஸ்வேதா மோகன், சபரீஷ் வர்மா, சரத் அப்பானி, சுதீர் கரமனா உள்ளிட்ட பலர் நடிப்பில், மனோஜ் யாதவ் இயக்கியுள்ள ‘ஜங்கார்’ மலையாளத் திரைப்படம் வரும் 4ஆம் தேதியன்று வெளியாகிறது.
’மரணமாஸ்’ படத்தில் சைக்கோ வில்லனாக கலக்கிய ராஜேஷ் மாதவன் நாயகனாக நடித்துள்ள படம் ‘தீரன்’. இந்த மலையாளப் படத்தில் மனோஜ் கே ஜெயன், வினீத், ஜகதீஷ், சுதீஷ், அசோகன், அஸ்வதி மனோகரன், சித்தார்த் பரதன் ஆகியோரோடு ’மெய்யழகன்’ படத்தில் அரவிந்த் சாமியின் அத்தை பெண்ணாக வந்த இந்துமதி மணிகண்டன், ’ஜமா’ படத்தில் கலக்கிய கிருஷ்ண தயாள் இடம்பெற்றுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைத்துள்ள இப்படத்த்தினை தேவதத் ஷாஜி இயக்கியிருக்கிறார்.
நிதின், ‘காந்தாரா’ புகழ் சப்தமி கவுடா, வர்ஷா பொல்லம்மா, சௌரஃப் சச்தேவா உள்ளிட்ட பலரது நடிப்பில், வேணு ஸ்ரீராம் இயக்கியுள்ள ‘தம்முடு’ தெலுங்கு திரைப்படமும் இவ்வாரம் வெளியாகிறது. இதற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
’ஆந்தாலஜி’ வகைமை போன்றே பல்வேறு கிளைக்கதைகள் ஒரு நகரத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாக ‘லைஃப் இன் எ மெட்ரோ’ இந்திப்படத்தைச் சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னே தந்தார் இயக்குனர் அனுராக் பாசு. மீண்டும் அதே போன்றதொரு கதையமைப்புடன் அவர் இயக்கியிருக்கிற படம் ‘மெட்ரோ இன் தினோ’. ஆதித்யா ராய் கபூர், சாரா அலிகான், அனுபம் கெர், பங்கஜ் திரிபாதி, கொங்கனா சென் சர்மா, அலி ஃபசல், பாத்திமா சனா ஷெய்க் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார்.
இவற்றோடு ஸ்கார்லெட் ஜோகன்சன், மஹர்ஷலா அலி, ஜோனதன் பெய்லி, நடிப்பில் காரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள ஹாலிவுட் படமான ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்’தும் இந்த வாரம் வெளியாகிறது. இது விஎஃப்எக்ஸ் வழியே டைனோசர்களை திரையில் காட்டும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
கடந்த வாரம் வெளியான மார்கன், லவ் மேரேஜ், குட் டே, கண்ணப்பா, திருக்குறள் படங்களுக்கான வரவேற்பு சிறப்பாக அமைந்துள்ள நிலையில் மேற்கண்ட திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவற்றில் எவை ரசிகர்களால் கொண்டாடப்படும் அல்லது அனைத்துமே சூப்பர்ஹிட் அந்தஸ்தை அடையுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.