செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தபிறகு ’எதுவும் சாத்தியம்’ என்கிற நிலை உண்டாகிவிட்டது. அதன்விளைவுகளில் ஒன்றாக, கடந்த காலத்தில் நாம் இழந்த பலவற்றைக் காட்சிரீதியாக உருவாக்குவதும் நிகழ்ந்து வருகிறது. அந்த வரிசையில், ‘ஃபாஸ்ட் & ப்யூரியஸ்’ படத்தின் 11அது பாகத்தில் ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மீண்டும் இடம்பெறுகிறார். paul walker in fast and furious 11
இந்த இடத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியது அவசியம். கார் ரேஸ், அதனால் ஏற்படுகிற போட்டி பொறாமை, பகைமையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ‘ஃபாஸ்ட் & ப்யூரியஸ்’ திரைப்படம் 2001இல் வெளியானது. இந்த படத்தில் பிரதான பாத்திரங்களில் வின் டீசல் மற்றும் பால் வாக்கர் நடித்திருந்தனர்.
பிறகு இரண்டு, மூன்று என்று அடுத்தடுத்த பாகங்கள் வந்து ரசிகர்களைக் குதூகலத்தில் ஆழ்த்தின. அதற்கேற்றாற் போல ஆக்ஷன் காட்சிகளுக்கான களங்களும் இலக்குகளும் மாற்றம் கண்டன.
2013ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் நடிகர் பால் வாக்கர் மரணமடைந்தார். அதனால், அவர் ஏற்ற பிரையன் ஓ கானர் பாத்திரம் ‘ஃபாஸ்ட் & ப்யூரியஸ்’ ஏழாம் பாகத்தில் விடை பெறுவதாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது ‘மிஷன் இம்பாசிபிள்’ பாணியில் ‘ஃபாஸ்ட் & ப்யூரியஸ்’ சீரிஸ் திரைப்படங்களும் நிறைவைக் காண இருக்கின்றன.
2027ஆம் ஆண்டு வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படும் ‘ஃபாஸ்ட் & ப்யூரியஸ்’ 11ஆம் பாகமே இந்த சீரிஸில் இறுதிப்படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கலிஃபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகர் வின் டீசல், இந்த படத்தில் நடிக்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். படத்தை உருவாக்கும் யூனிவர்சல் ஸ்டூடியோஸிடம், ‘நான் நடிக்க வேண்டுமென்றால் மூன்று நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.
’ஃபாஸ்ட் & ப்யூரியஸ் கதை தொடங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை மையப்படுத்தி இப்படம் இருக்க வேண்டும். முதல் பாகத்தில் ரசிகர்களை ஈர்த்த கார் ரேஸுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும். மூன்றாவதாக, மீண்டும் பிரையன் ஓ கானர் பாத்திரம் இதில் இடம்பெற வேண்டும்’ என்பதே அந்த நிபந்தனைகள்.
2023இல் வெளியான ‘ஃபாஸ்ட் & ப்யூரியஸ் 10’ உலகளவில் 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. அப்படிப்பட்ட பல வெற்றிகளுக்குக் காரணமான ஒரு சீரிஸின் நிறைவுப்பகுதி மீது எந்தளவுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பினைக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்லாமல், ஏஐ அல்லது இதர நுட்பங்களின் துணையோடு பால் வாக்கர் பிம்பம் அக்கதையில் இடம்பெறுவதுதான் அவருக்கான சிறந்த மரியாதையாகவும் இருக்கும்.
அதேநேரத்தில், வின் டீசல் சொன்னவாறு பால் வாக்கர் மீண்டும் அந்த படத்தில் இடம்பெறுவாரா என்பதைத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஆனாலும், ’இப்படியொரு தகவல் பொதுவெளியில் வெளியாகிறது என்றால் அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதுதானே’ என்கிற ‘கமெண்ட்’களையும் மறுப்பதற்கில்லை. paul walker in fast and furious 11