கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை விட, அடுத்த 5 ஆண்டுகள் இன்னும் தமிழ்நாட்டிற்கு அதிக சாதனைகள் செய்வார் எங்க தலைவர் என்று தைரியமாக மக்களிடத்தில் சொல்லுங்கள் என மு.க.ஸ்டாலின் திமுகவினரை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
திருச்சியில் நடந்த 12 ஆவது திமுக மாநில மாநாட்டை தொடங்கி வைத்து திமுக தலைவரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஒவ்வொரு உடன்பிறப்பும், மக்களிடம் போகும்போது சொல்ல வேண்டியது என்ன? நடக்க இருக்கும் தேர்தல், தி.மு.க. vs NDA கிடையாது! தமிழ்நாடு வெர்சஸ் NDA! இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், வெல்லப்போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதுதான் 2026 தேர்தல்! இதில் நம்முடைய தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்றால், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும்! உங்கள் வாக்குகளைத் தி.மு.க.வுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் போடுங்கள் என்று கேளுங்கள்! இதுதான் நீங்கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடைவிடாமல் மக்களிடம் பரப்ப வேண்டிய மெசேஜ்!
அதேபோன்று, இங்கே வந்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு நான் வைக்கும் மற்றொரு வேண்டுகோள் என்பது, உதயசூரியன் சின்னம் வெற்றி பெற நீங்கள் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு உழைக்கிறீர்களோ, அதே உழைப்பை நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களின் வெற்றிக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய சாதனைகள், கொள்கைகள் மட்டும் நம்முடைய பலம் இல்லை! நான்காவது பொதுத் தேர்தலை இணைந்து சந்திக்கும் கூட்டணியும், நம்முடைய பெரிய பலம்தான்!
மற்றவர்களைப்போல் வெறும் தேர்தலுக்காக, எலக்ஷன் சீசனில் மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை! கொள்கையின் அடிப்படையில், கொள்கைத் தோழர்களான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் நீங்கள் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மக்களைச் சென்று சந்திக்கின்ற நீங்கள், இன்னொரு விஷயத்தையும் சொல்லுங்கள். “தமிழ்நாட்டில், இதுவரை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்து மக்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அவர்களுக்குப் பின்பு, நீங்கள் வாக்களித்து ஜெயிக்க வைத்தது இந்த ஸ்டாலினைத்தான்!
கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை விட, அடுத்த 5 ஆண்டுகள் இன்னும் தமிழ்நாட்டிற்கு அதிக சாதனைகள் செய்வார் எங்க தலைவர் என்று தைரியமாக மக்களிடத்தில் சொல்லுங்கள். தமிழ்நாட்டைத் தொடர்ந்து நம்பர்-1 மாநிலமாக்க எங்கள் தலைவருக்கு ஆதரவு கொடுங்கள் என்று நம்பிக்கையோடு வீடு வீடாக சென்று சொல்லுங்கள். நம்மால் பயனடைந்த அவர்கள், நிச்சயம் உங்களை வரவேற்பார்கள்.
இந்த ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான், சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால், தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி… நீங்கள் ரெடியா? நம் மண்- மொழி- மக்களை காக்க, நான் ரெடி… நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி… நீங்கள் ரெடியா? நம்முடைய வெற்றி, கழகத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! அதை உணர்ந்து நீங்கள் உழைக்க வேண்டும்! ஏழாவது முறையும் நாம்தான்! இனி எப்போதும் நாம்தான்! திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! வெல்வோம் ஒன்றாக!” என தெரிவித்தார்.
