திருத்தணி ரயில் நிலையம் அருகே தாக்குதலுக்கு உள்ளானவர் வடமாநில இளைஞர் என்பதால் தாக்கப்பட்டதாக கூறுவது தவறு என வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருத்தணியில் ரயில் நிலையம் அருகே சிறார்களால் பட்டாக்கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கப்படும் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இன்று (டிசம்பர் 30 )செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல் கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் தமிழகத்தில் வேலைக்காக வரவில்லை. அவர் அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கடந்த ஒன்றரை மாதமாக ரயிலில் பயணம் செய்கிறார். இந்த சம்பவம் நடந்த உடன் தமிழக காவல்துறை முதலில் அவருக்கு திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகார் அடிப்டையில் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடியா மொழி தெரிந்த முன்னாள் ராணுவ வீரர் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறார் நீதிக் குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளில் ஒருவரை பெற்றோருடன் அனுப்பியது நீதிபதியின் முடிவு.
குறிப்பாக தாக்குதலுக்கு உள்ளானவர் வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்தது என்று கூறுவது தவறு. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. சிறார்கள் ரயிலில் ரிலீஸ் எடுக்கும்போது ஒடிசா இளைஞரிடம் ஏன் முறைத்து பார்க்கிறாய் என கேட்டதே தாக்குதலின் தொடக்கமாக இருந்துள்ளது.
முதல்கட்ட விசாரணையில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வீட்டில் இருந்தே 2 பட்டா கத்திகளை கொண்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறார்களிடம் இருந்து 2 பட்டாகத்திகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது. அவர் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
மேலும் இது சமூக வலைத்தளங்களின் காலம் என்பதை போலீசாரும் உணர்ந்துள்ளோம். மாணவர்கள் மோதல்கள், சிறார்களின் ரீல்ஸ் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல வழக்குகளில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை வழங்குகிறோம். சிறார் விவகாரங்களில் எல்லாவற்றிற்கும் சட்ட நடவடிக்கையே தீர்வு என போலீசார் செயல்பட முடியாது ” என்று அவர் தெரிவித்தார்.
