திருப்புவனத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அஜித் குமார் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் 27-ஆம் தேதி இந்த கோவிலுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சிவகாமி, அவரது மகள் நிகிதா ஆகியோர் வந்துள்ளனர்.
அப்போது, அவர்கள் வந்திருந்த காரை பார்க் செய்ய அஜித் குமார் உதவியுள்ளார். இந்தநிலையில், காரில் இருந்து 10 பவுன் தங்க நகைகளை காணவில்லை என்று திருப்புவனம் காவல்நிலையத்தில் சிவகாமி புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அஜித்குமார், அவரது சகோதரர் உள்பட ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறை விசாரணையின் போது, அஜித்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித் குமார் உயிரிழந்தார். thiruppuvanam ajithkumar custodial death
அஜித் குமாரை கொடூரமாக தாக்கி போலீசார் தான் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ் குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், “அஜித் குமார் உயிரிழந்ததில் அரசியல் தலையீடு, காவல்துறை தலையீடு இருந்தது. பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் உடலை வாங்கிக்கொண்டு அஜித் குமார் உடல் எரியூட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது பொதுநல மனுவாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள், “உயிரிழந்த அஜித் குமார் என்ன தீவிரவாதியா? சாதாரண வழக்கில் கைதானவரிடம் எந்தவிதமான ஆயுதமும் வைத்திருக்காத ஒருவரை அடித்து காவல்துறை கொலை செய்துள்ளதா?
தமிழகத்தில் இதுவரை 24 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டுப்படுகிறதே? அதுதொடர்பான விவரம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, “இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது. அதேநேரத்தில், மனுதாரர்கள் முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அனுமதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக சார்பில் மாரீஸ் குமார் மனுத்தாக்கல் செய்தார். thiruppuvanam ajithkumar custodial death