திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது. இதற்கு எந்தவிதமான வரலாற்று ஆதாரங்களும் இல்லை.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றவதற்கு உரிய ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் அந்தப் பகுதியில் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் கூட இத்தகைய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
அந்த மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட ஒரு ‘சர்வே கல்’ என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
இல்லாத ஒரு வழக்கத்தை புகுத்தித் தமிழ்நாட்டில் குழப்பத்தை உருவாக்கவும், மதக்கலவரங்களைத் தூண்டவும் ஒரு சாரார் முயற்சிக்கிறார்கள்” என்று கூறினார்.
