திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று (ஜனவரி 6) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், “பக்தர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. திமுக தலைவர்களால் சனாதன தர்மத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் பிற மூத்த தலைவர்கள் தொடர்ந்து சனாதன தர்மத்தை திட்டி, கேலி செய்து, தாக்கி வருவது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல.
2023 செப்டம்பர் மாதம், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். தற்போது பக்தர்கள் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது.
தற்போது முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நீதிபதி சுவாமிநாதன் டிசம்பர் 1, 2025 அன்று, தீபம் ஏற்றும் நடைமுறையைத் தொடர அனுமதிக்கும் தீர்ப்பை வழங்கினார். இந்த உத்தரவுக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது இந்து தர்மத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிரான ஒரு சார்பு மனநிலையையும், ஸ்டாலின், அவரது மகன் மற்றும் திமுக கட்சி மற்றும் அவர்களின் ‘இந்தியா’ கூட்டணி நண்பர்களின் வெறுப்பையும் தெளிவாகக் காட்டுகிறது,” என்றார்.
