தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். விஜய் பாஜகவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து தன் எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்ள மாட்டார் என நம்புவதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “2021ல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த கட்சிகளையே ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகத் தம் கூட்டணிக்கு இழுக்கிற வேலையில் ஈடுபட்டு தேமுதிகவை இழந்து நிற்கிறார்கள். இப்போது நடிகர் விஜயை அந்தக் கூட்டணியில் இணைக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அழுத்தம் கொடுத்து அவரை அடிபணிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்று ஊடகங்களில் பெரிய அளவிலே விவாதிக்கப்படுகின்றன.
அவர் அந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிவாரானால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். அது அவருக்கும் தெரியும். பிற மாநிலங்களில் பாஜக எப்படிச் சங் பரிவார்கள், பாஜக உள்ளிட்ட அனைவரும் எதிர்க்கட்சிகளை நயவஞ்சகமாக வளைத்துப்போடுவது அல்லது அவதூறு பரப்பி எதிர்ப்பது என்ற உத்திகளைக் கையாளுகிறார்களோ அதே உத்திகளை தமிழ்நாட்டிலும் கையாள முயற்சிக்கிறார்கள். நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார். தன்னுடைய எதிர்காலத்தை அவரே சூனியமாக்கி கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன்.
முன்னதாக மத்தியில் ஆளும் பாஜக விஜய்க்கு அரசியல் ரீதியான அழுத்தங்களை தர ஆரம்பித்து விட்டதாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர் கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
