புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டு அம்மாநில முதல்வர் ரங்கசாமி காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
புதுவையில் உள்ள சுமார் 3.47 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கத் திட்டமிடப்பட்டது. இதற்கு ரூ.140 கோடி வரை தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அனுப்பப்பட்ட கோப்புகளை, “போதிய நிதி இல்லை” எனக் கூறி நிதித் துறை திருப்பி அனுப்பியது. இதனால் பொங்கல் பரிசு வழங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் ரூ.14,100 கோடிக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ரங்கசாமி தொலைபேசியில் பேசினார். விரிவான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று அம்மாநில அமைச்சர் லட்சுமி நாராயணன் உரிய ஆவணங்களுடன் டெல்லி செல்கிறார். இதனால் புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.4,000 கிடைக்குமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக புதுவை மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.4,000 ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
