அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும்போது, மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியாகப் பேச வேண்டும், உலகம் ஒன்றிணைய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த போரில் இதுவரை 65,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக காசாவின் மீது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது .இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநா விசாரணை ஆணையமே அறிக்கை அளித்துள்ள நிலையில் நாம் அனைவரும் இணைந்து பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஙஇது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் பாராமுகமாக இருக்கக் கூடாது. காசாவில் நடக்கும் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து உள்ளேன். ஒவ்வொரு காட்சியும் குடலை நடுங்கச் செய்கிறது. குழந்தைகளின் அழுகைகள், பசியால் வாடும் குழந்தைகளின் காட்சிகள், மருத்துவமனைகள் மீதான குண்டுவீச்சு, மற்றும் ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்துள்ளதாக அளித்துள்ள அறிக்கை என அனைத்தும் எந்த மனிதனும் ஒருபோதும் அனுபவிக்கக் கூடாத துன்பத்தைக் காட்டுகின்றன. இவ்வாறு அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும்போது, மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியாகப் பேச வேண்டும், உலகம் ஒன்றிணைய வேண்டும், மற்றும் இந்தக் கொடுமையை இப்போதே முடிவுக்கு கொண்டு வர நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.