கர்நாடகா மாநிலம் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்கு திருட்டு எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புதிய குற்றச்சாட்டுகள் என்னவாக இருக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வாக்கு திருட்டுகள் எப்படி நடைபெற்றன என்பது தொடர்பாக கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி விரிவாக விளக்கி இருந்தார். வாக்கு திருட்டு ஆதாரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்தே எடுத்து வெளியிட்டிருந்தார் ராகுல் காந்தி.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டுக்கு எதிராக பிரசார பயணமும் மேற்கொண்டார் ராகுல் காந்தி. இந்த பேரணியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இதனிடையே பீகாரில் நடைபெற்ற தமது வாக்குரிமை யாத்திரையின் நிறைவு பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “வாக்கு திருட்டு தொடர்பாக முன்னர் நான் வீசியது அணு குண்டுதான்.. இனி இருக்கும் ஆதாரங்களை வீசினால் அது ஹைட்ரஜன் குண்டுகளாக இருக்கும்” என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று (செப்டம்பர் 18) ராகுல் காந்தி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்கு திருட்டு எப்படி நடைபெற்றது என்பதை விவரித்தார்.
அப்போது,
- கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 6,018 வாக்குகளை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- வாக்கு திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர்குமார் பாதுகாக்கிறார் என குற்றம்சாட்டுகிறேன்.
- கோதாபாய் என்ற பெயரில் போலியாக லாக் இன் உருவாக்கி 12 வாக்குகளை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- 6,018 வாக்குகளை நீக்க, வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளனர் என்றார் ராகுல் காந்தி.









