தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான இலவச உணவு வழங்கும் திட்டத்தை மாநில அளவில் விரிவுபடுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9)தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் முதன்முதலில் சென்னை மாநகராட்சியில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ஷிப்ட் முறையில் பணியாற்றும் 30,000-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் மூன்று வேளைகளில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

காலை உணவில் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. மதிய உணவில் சாதம், குழம்பு, காய்கறி, ரசம், தயிர் போன்றவை இடம் பெறுகின்றன. இரவு உணவில் சப்பாத்தி, ரொட்டி போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணியாற்றும் மொத்தம் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்களுடன் உரையாடிய முதல்வர், அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம்! 2025 நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29,455 பணியாளர்கள் பயன்பெறத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் காண்கிறது.

தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் திராவிட மாடல் அரசு. இன்னும் பல நலத்திட்டங்களைச் செய்து தருவோம்! என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share