ADVERTISEMENT

விஜய் தொண்டர்கள்… கொந்தளிக்கும் பனையூர் மக்கள் !

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெகவின் பனையூர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் இன்று (பிப்ரவரி 6) அக்கட்சி தொண்டர்கள் குவிந்த நிலையில், இதுக்கா இவ்வளவு காசு கொடுத்து அமைதியாக இருக்க நினைத்து ஈசிஆர்-ல் வீடு வாங்கினோம் என அப்பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர்.

சென்னை புறநகர்ப் பகுதியான பனையூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பனையூர் அலுவலகத்திலும் தேர்தல் பணிகள் களைகட்டியுள்ளன. தவெக தலைமை அறிவிப்பின்படி, இன்று (பிப்ரவரி 6) முதல் 14ஆம் தேதி வரை சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் பனையூர் அலுவலகத்திற்கு வந்து குவிந்தனர். காலை முதலே கார்கள், பைக், வேன்கள் எனப் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அலுவலக வளாகத்திற்கு வெளியே திரண்ட கூட்டம், சாலைகளை அடைத்து, ஹாரன் சத்தம், கூச்சல் ஆகியவற்றால் பகுதி முழுவதும் அமைதியிழந்தது. இதனால், அப்பகுதி மக்கள் சாலைகளைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெகவினர் செய்யும் அராஜகத்தைத் தாங்க முடியவில்லை. இதற்கு மேல் சும்மா இருக்க மாட்டோம். போலீஸிடம் கேட்டால், ‘நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை’ என்று சொல்கிறார்கள். அமைதியாக வாழ்வதற்காகத்தான் விலை அதிகம் கொடுத்து ஈசிஆர்(கிழக்கு கடற்கரைச் சாலை) பகுதியில் வீடு வாங்கி வந்தோம்.. ‘மேடம், நாங்கள் உங்க காரை மட்டும் அனுமதிக்கிறோம்’ என்கிறார்கள். எங்களை அனுமதிக்க நீங்கள் யாரு? இது எங்க இடம்… வரி நாங்க கட்டுகிறோம்” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “11ஆவது அவென்யூ வரை பிளாக் செய்திருக்கிறார்கள். வேலைக்காரர்களைக் கூட உள்ளே வர விட மாட்டேன் என்கிறார்கள். அந்த ஓனர் வந்து இவர்களிடம் கெஞ்சி, வேலைக்காரர்களை உள்ளே கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. எல்லா இடங்களிலும் தடுப்புகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை… மாதக்கணக்கில் பார்த்துட்டுத்தான் நாங்கள் இப்போது வெளியே வர ஆரம்பித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இவர்கள் இன்னும் அரசியலுக்கு வரவே இல்லை… அதற்குள்ளேயே எங்களுக்கு இவ்வளவு பிரச்சினை. வேற இடம் இல்லையா? 3 நாளைக்கு முன்னாடிதான் ஒரு மீட்டிங் நடந்தது. சாப்பிட்டு குப்பையைப் போட்டுவிட்டுப் போறாங்க… அதை கிளீன் பண்ண மாட்டேங்கிறாங்க. ஏதாவது சொன்னா சண்டை போடுறாங்க” என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share