மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டது.உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 5 மணியளவில் பதிலுரை அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவர் மக்களவையில் பதிலுரை வழங்குவது ரத்து செய்யப்பட்டது.
இன்று காலையிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.இதைத் தொடர்ந்து, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை அளிக்க உள்ளார்.
முன்னதாக, கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பிரதமர் பதிலுரை இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அரசியல் நிலைமை தலைகீழாக இருந்தது. பிரதமர் மன்மோகன் சிங் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோது, எதிர்க்கட்சியான பாஜக தீர்மானத்திற்கு பதிலளிப்பதைத் தடுத்தது.
இதையடுத்து, 2005ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே உரையாற்றியபோது,“மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எங்கள் அரசாங்கத்தின் நன்றியைத் தெரிவிப்பதற்காக இன்று இங்கு நிற்பதை நான் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இதற்காக ஒராண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால் எனக்கு இது மிகக் கடினமாகப் பெறப்பட்ட பாக்கியம்” என்று கூறினார். மேலும், குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டு ஆற்றிய உரைக்கும் இந்த ஆண்டு ஆற்றிய உரைக்கும் நன்றி தெரிவித்தார்.
இது குறித்த வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார்.
