தொண்ணூறுகளில் பதின்ம வயதைத் தொட்டவர்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு ரசனை இருக்கும். திரைப்பட ரசனையைப் பொறுத்தவரை, அவர்களுக்குப் பிடித்த நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர், இயக்குனர் என்று நீளும் பட்டியல் அதற்கு முந்தைய தலைமுறையில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அஜித், ஷங்கர் என்றிருக்கிற வரிசையில் மிக முக்கியமானவர் பாடகர் ஹரிஹரன். the great playback singer hariharan 70th birthday
’தமிழா தமிழா நாளை நம் நாளே’ என்றவர், ‘உயிரே உயிரே’ என்று காதலில் உருகியதும், ‘நிலா காய்கிறது’ என்று தாலாட்டியதும், ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என்று தத்துவ மழை பொழிந்ததும் மறக்க முடியாத ஒன்று. அப்படிப் பலவிதமான பாடல்கள் வழியே பல்வகை உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்தவருக்கு இன்று 70வது பிறந்தநாள் என்பதை நம்பக் கடினமாகத்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு, இன்றும் இளமைத் துள்ளலுடன் இருந்து வருகிறது அவரது குரல்.

வித்தியாசமான பின்னணி! the great playback singer hariharan 70th birthday
திருவனந்தபுரத்தில் ஹெச்.ஏ.எஸ். மணி – அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் ஹரிஹரன். கேரளாவில் வசித்த தமிழ் குடும்பம் இவருடையது.
இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே மும்பைக்கு இடம்பெயர்ந்தது குடும்பம். அங்கு கர்நாடக சங்கீதம் கற்க விரும்பியவர்களுக்குப் புகலிடமாக விளங்கியிருக்கிறார் மணி. ஆனாலும், நாற்பதுகளில் இருந்தபோது மாரடைப்பால் அவர் மறைந்தார். அதன்பிறகு, தாயார் அலமேலு கர்நாடக இசைக்கச்சேரிகளில் புகழ் பெற்று விளங்கினார்.
மும்பையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் இந்தி, உருது, தமிழ், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் சிறப்பான புலமையைப் பெற்றார் ஹரிஹரன். 1977இல் திரையிசையில் பின்னணிப் பாடகராகத் தனது வாழ்வைத் தொடங்கினார். பின்னாட்களில் கஜல் பாடகராக, இசையமைப்பாளராக அறியப்பட்டார்.
தொண்ணூறுகளின் பிற்பாதியில் பாடகர், இசையமைப்பாளர் லெஸ்லி லீவிஸ் உடன் இணைந்து ‘கலோனியல் கஸின்ஸ்’ எனும் குழுவைத் தொடங்கி 3 ஆல்பங்களை வெளியிட்டார். தமிழில் இயக்குனர் சரணின் ‘மோதி விளையாடு’ படத்திற்கு இந்த காம்போ இசையமைத்திருக்கிறது.
காதில் கடுக்கன், பின் மண்டையில் குடுமி இடும் அளவுக்கு முடி, ஸ்டைலிஷான கோட் சூட், வாய் திறந்தால் வெள்ளமெனப் பாயும் மெலடி மெட்டுகள் என்று ரசிகர்களுக்கு வித்தியாசமாகத் தோற்றமளித்தார் ஹரிஹரன். அந்த காலகட்டத்தில், மும்பையில் இருந்து அவரைச் சென்னைக்கு வரவழைத்து ஆறேழு படங்களில் தலா ஒரு பாடலையாவது பாட வைப்பது என்றிருந்தனர் சில இசையமைப்பாளர்கள்.
காரணம், அப்போதிருந்த இளைய தலைமுறையை ஹரிஹரன் குரல் வசீகரித்தது தான். the great playback singer hariharan 70th birthday

நினைவில் நின்றவை! the great playback singer hariharan 70th birthday
மலையாளம், இந்தி மொழிகளில் ஏற்கனவே பாடியிருந்த ஹரிஹரன், தமிழில் ‘ரோஜா’ வழியே அறிமுகம் ஆனார். பின்னர் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’, ‘பம்பாய்’, ‘இந்திரா’ என்று பல படங்களில் அவரது குரல் இடம்பெற்றது.
இசையமைப்பாளர் தேவா உடன் ஹரிஹரன் இணைந்தது ‘ஆசை’ படத்தில் தான். அதில் வரும் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடல் இன்றும் அஜித் ரசிகர்களின் பேவரைட். பிறகு ‘என் மனதைக் கொள்ளையடித்தவளே’, ‘காதலா காதலா’, ’உன் உதட்டோரச் சிவப்பிலே’, ‘தாஜ்மஹாலே’, ’ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’, ‘நகுமோ’ என்று பல மெலடி பாடல்கள் தந்திருக்கிறார்.
இன்னும் நேருக்கு நேர், ஆஹா, ரெட்டை ஜடை வயசு, நினைத்தேன் வந்தாய், உன்னுடன், ஆனந்த பூங்காற்றே, நெஞ்சினிலே, கண்ணோடு காண்பதெல்லாம், மின்சார கண்ணா, முகவரி, குஷி, அப்பு, உயிரிலே கலந்தது என்று தேவாவின் ஹிட் ஆல்பங்களில் அவரது குரல் இடம்பெற்றது வரலாறு.
இது போதாதென்று பிரசாந்த் நடித்த ‘மன்னவா’வில் ‘இந்து மகா சமுத்திரமே’ உட்பட மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். ’உன்னைத் தேடி’ படத்தில் ஐந்து பாடல்களை அதிர விட்டிருப்பார்.
‘ஒரு தேதி பார்த்தா’, ‘உடையாத வெண்ணிலா’, ’சிந்தாமணி சிந்தாமணி’, ’நீ காற்று நான் மரம்’, ‘அன்பே அன்பே’, ’மழைக்காற்று வந்து’, ‘தோம் தோம் தித்தித்தோம்’, ’பொய் சொல்லக் கூடாது’, ‘ஒரே மனம்’, ’தவமின்றிக் கிடைத்த வரமே’ என்று தமிழில் வித்யா சாகர் இசையமைத்த படங்களில் மிகச்சில பாடல்களைப் பாடியிருக்கிறார் ஹரிஹரன். ஆனால், அவை அனைத்துமே இன்னொருவர் குரலில் நாம் கேட்போமா என்ற கேள்வியை எழுப்பும் ரகத்தில் அமைந்தவை.
சிற்பி இசையில் ‘ஹே சா சா சா காதலிச்சா’ என்று துள்ளல் பாடல்களையும் தந்திருக்கிறார் ஹரிஹரன். அதற்கு இணையாக ‘குமுதம் போல்’, ’நான் வானவில்லையே பார்த்தேன்’, ’வெண்ணிலவே வெண்ணிலவே’, ’யார் இந்த தேவதை’ போன்ற மெல்லிசைப் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்.
’இவரது இசையில்தான் ஹரிஹரன் அதிக பாடல்களைத் தமிழில் பாடியிருக்கிறாரோ’ என்று ஒருகாலத்தில் எண்ண வைத்தவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். ’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’, ‘காதலா காதலா’, ’நன்றி சொல்ல உனக்கு’, ’தொடு தொடு எனவே’, ‘இருபது கோடி’, ’ஒரு தேவதை வந்துவிட்டாள்’, ‘மூக்குத்தி முத்தழகு’, ’காதல் வெண்ணிலா’, ‘என்னமோ மாற்றம்’, ’எனக்கொரு சினேகிதி’, ‘என்னவோ என்னவோ’, ’பிரிவொன்றைச் சந்தித்தேன்’, ’என்ன இதுவோ’, ’பூப்போல தீப்போல’, ’மான் குட்டியே’, ‘என்ன தேசத்தில்’ என்று சில மறக்க முடியாத பாடல்களைத் தந்திருக்கிறது இக்கூட்டணி.
இளையராஜா இசையில் ஹரிஹரன் முதன்முதலாகப் பாடியது ‘காதலுக்கு மரியாதை’யில் வரும் ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ பாடல். தொடர்ந்து பூந்தோட்டம், தேசிய கீதம், காதல் கவிதை, நிலவே முகம் காட்டு, டைம், மனம் விரும்புதே உன்னை, கண்ணுக்குள் நிலவு, ஹே ராம், கரிசகாட்டு பூவே, ப்ரெண்ட்ஸ் என்று அந்த கிராஃப் மேலேறுவதைக் காண முடியும். அந்த வரிசையில் ‘காசி’யில் ஹரிஹரனுக்கு ‘புண்ணியம் தேடி காசிக்கு செல்வார்’ உட்பட 6 பாடல்கள் தந்தார் இளையராஜா. அதில் எனக்குப் பிடித்தது ‘மனசெல்லாம்’ படத்தில் வரும் ‘நீ தூங்கும் நேரத்தில்’ பாடல்.
கார்த்திக் ராஜா தந்த ‘கொஞ்சும் மஞ்சள் பூக்கள்’, ‘இந்த சிறுபெண்ணை’, ‘கட்டான பொண்ணு ரொமாண்ட்டிக்கா’, ’ரகசியமாய்’ என்று நினைவில் நிற்கும் சில மெலடிகளை தந்திருக்கிறார். அந்த வரிசையில் ‘உள்ளம் கொள்ளை போகுதே’வில் 5 பாடல்கள் பாடியிருப்பார். இந்த படத்தின் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கிய ‘உன்னைத் தேடி’யிலும் ஹரிஹரன் 5 பாடல்கள் தந்திருப்பார்.
இன்னும் ரஞ்சித் பரோட், பரணி, யுவன் சங்கர் ராஜா, சபேஷ் முரளி, ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், மணி சர்மா, ஸ்ரீகாந்த் தேவா என்று ஒரு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் கைகோர்த்தவர், பின்னர் தேவிஸ்ரீ பிரசாத், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, சுந்தர்.சி.பாபு என்று இன்னொரு தலைமுறையின் அழைப்புகளையும் ஏற்கும் வகையில் திகழ்ந்திருக்கிறார் ஹரிஹரன்.
சுருக்கமாகச் சொன்னால், தனது இசை வன்மையால் 80’ஸ் கிட்ஸை கதற விட்டிருக்கிறார். தினசரி வாழ்வின் சுமை தாங்காமல் நசுங்கிப் போகும் தருணங்களில் எல்லாம் காத்து நிற்கும் சுவைகளில் ஒன்றாக இருக்கின்றன ஹரிஹரன் குரலில் ஒலித்த பாடல்கள். the great playback singer hariharan 70th birthday

தனித்துவமான குரல்! the great playback singer hariharan 70th birthday
மேற்சொன்ன பாடல்களை அடுத்தடுத்து கேட்கும்போது, ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒவ்வொரு விதமாக அவரது குரலைப் பயன்படுத்தியதை அறிய முடியும். அந்த பாடலின் தாள கதி எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஹரிஹரன் குரலில் அவர்கள் குறிப்பிட்ட லயத்தையே எதிர்பார்த்தது தெரியவரும்.
வேறு பாடகர்கள் அப்பாடல்களைப் பாடியிருந்தாலும் கூட அவை ‘ஹிட்’ ஆகியிருக்கலாம். ஆனால், இப்போது வரை அவை நம் மனதில் செலுத்தியிருக்கும் தாக்கம் மாறாமல் அப்படியே திரும்பக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
வேறு மொழிப் படங்களில், தனியிசை ஆல்பங்கள், இந்துஸ்தானி இசை மரபு சார்ந்த இசையில் ஹரிஹரன் குரலில் எத்தனை பாடல்கள் அமைந்திருந்தாலும், அவை நிச்சயம் தமிழில் இருக்கும் திரையிசைப் பாடல்களுக்கு ஈடாகாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு தலைமுறையின் ஒருமித்த குரலாக அவை இருக்கின்றன. அவர்களது இளமையின் துடிப்பை அவை பிரதிபலித்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களது நினைவலைகளைக் கூட்ட துணை நிற்கின்றன. வருங்காலத்திலும் கூட அவை அதைத்தான் செய்யும்.
ஹரிஹரனுக்கு 70வது பிறந்தநாள் வாழ்த்துகள்!