சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறவில்லை, திட்டமிட்டு அவர் உரையாற்றக் கூடாது என்று செயல்படுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) காலை 9.30 மணிக்கு கூடியது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்கும் வகையில் “யார் அந்த சார்?” என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்தனர்.
பேரவைக்குள், “#Save the daughters, யார் அந்த சார், தமிழ்நாடு அரசே மறைக்காதே… நீதி வேண்டும், நீதி வேண்டும் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வேண்டும், யார் அந்த சார் என்ற கேள்விக்கு ஸ்டாலின் அரசே பதில் சொல்… உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. கிராமங்கள் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் கஞ்சா புழங்குவதால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குற்றங்கள் அதிகரிக்கிறது. சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “ஆளுநர் உரை இன்று சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. இந்த உரை காற்றடித்த பலூன் போல் பெரியதாக இருக்கிறதே தவிர உள்ளே ஒன்றும் இல்லை.
இந்த உரையின் மூலம் திமுக அரசு சுய விளம்பரத்தை தேடிக்கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
அண்ணா பல்கலை கழக விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இனியும் அரசு தூங்கிக் கொண்டிருக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த பதாகைகளை எடுத்துச் சென்றோம்.
யார் அந்த சார்? என்று கேட்டால்,இந்த அரசு ஏன் பதற்றப்படுகிறது. அமைச்சர்களுக்கு ஏன் கோபம் வருகிறது. ஏன் மாறி மாறி பேட்டிக் கொடுக்கிறார்கள். யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது. இந்தியாவே யார் அந்த சார்? என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இரண்டு, மூன்று முறை திமுக அரசின் அவலங்களை மனுவாக கொடுத்தோம். அதற்கே எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக சார்பில் பெண் வழக்கறிஞர் மூலம் அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தோம்” என்றார்.
இந்த வழக்கின் விசாரணையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் காவல் ஆணையர் சொன்னதற்கும், அமைச்சர்கள் சொல்வதற்கும் முரண்பாடு உள்ளது. அதனால்தான் நாங்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளோம்” என்றார்.
ஆளுநரின் வெளிநடப்பு குறித்த கேள்விக்கு, “ஆளுநர் புறக்கணித்து செல்லவில்லை. திட்டமிட்டு ஆளுநர் உரையாற்றக் கூடாது என்று ஒரு நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் உரையில் ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையின் மரபு எப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது” என்று கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்களை பார்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி, ”சட்டமன்றத்தில் எங்கே எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை ஒளிபரப்பு செய்கிறார்கள், நான் பேசுவதை எடிட் செய்துவிடுகிறார்கள்.
எல்லாமே இருட்டடிப்புதான். இந்த அரசாங்கம் செயல்படுகிறதா என்று மக்களும், ஊடகமும் தான் சொல்ல வேண்டும். நாங்கள் எங்கள் ஆட்சியில் ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தோம். இந்த அரசாங்கம் எதற்குமே அனுமதி கொடுப்பதில்லை. ஏன் கூட்டணி கட்சிக்கே அனுமதி கொடுப்பதில்லை. அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், எதிர்கட்சிகளுக்கு என்ன நிலைமை என்று புரிந்துகொள்ளுங்கள்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேசிய கீதம் சர்ச்சை : கடந்த ஆண்டே ஆளுநருக்கு விளக்கமளித்த அப்பாவு