தேசிய கீதம் சர்ச்சை : கடந்த ஆண்டே ஆளுநருக்கு விளக்கமளித்த அப்பாவு

Published On:

| By christopher

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை வாசிக்கப்பட வேண்டும் என்பது சட்டப்பேரவை மரபு. ஆனால் தொடந்து உரையை மாற்றியும், புறக்கணித்தும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்தாண்டின் முதல் கூட்டத்தொடரில் தனது உரையை இன்று (ஜனவரி 6) வாசிக்க வந்த ஆளுநர் ரவி தேசிய கீதம் சட்டமன்றத்தில் பாடப்படவில்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியுள்ளார்.

இதே போன்று கடந்த ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் ஆளுநர் உரை வாசிக்க வந்த ஆர்.என்.ரவி, தனது உரையின்போது, “நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து அதனை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் தேசிய கீதம் குறித்த இந்த கருத்துக்கு சபாநாயகர் அப்பாவு அப்போது விளக்கம் அளித்திருந்தார்.

அவர், ”இன்றைய நிகழ்வில் ஆளுநர் உரை என்பது அரசமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு உள்ள கடமை. அந்த கடமையை நிறைவேற்ற ஆளுநர் இன்று பேரவைக்கு வருகை தந்தார். இப்பேரவை எப்போதும் மரபுகளை மதித்து பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்துக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரை முடிவின்போது தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது என்பதை கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்” என்றார். அதே போன்று அந்த கூட்டத்தொடரின் முதல் நாள் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தேசிய கீதம் பிரச்சனையை மீண்டும் எழுப்பி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வெளியேறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தேசிய கீதம் அவமதிப்பு? : உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்

முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா பறிமுதல் : காவல் துறை விளக்கம்!

மதகஜராஜா பட விழாவில் கைநடுக்கத்துடன் பேசிய விஷால்… கலங்கும் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel