முனைவர். ச.குப்பன்
தமிழ்நாடு, அதன் வளமான வேளாண்மையின் பாரம்பரியத்துடன், மாறிவரும் காலநிலை, தண்ணீர் பற்றாக்குறை, நவீனமயமாக்கல் ஆகிய பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த சவால்களைச் சமாளித்து, வேளாண்மையை இலாபகரமான , நிலையான தொழிலாக மாற்றுவதற்கு, நவீன தொழில்நுட்பமும், புதுமையான அணுகுமுறைகளும் இன்றியமையாத பணிகளாகும். தமிழ்நாட்டின் வேளாண்மையின் எதிர்காலமானது, பாரம்பரிய நடைமுறைகளை நவீன அறிவியலுடன் மிகச்சரியாக இணைப்பதில் மட்டுமே உள்ளது.
நவீன வேளாண்மை நுட்பங்கள்: தொழில்நுட்பத்தின் பங்கு
நவீன தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மையின் எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கின்றன.
துல்லிய வேளாண்மை (Precision Farming)

வேளாண் பயிர்களுக்குத் தேவையான நீர், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றினை மிகச்சரியான அளவில், மிகச்சரியான நேரத்தில் வழங்குவதற்கு இந்த வழிமுறை உதவுகிறது. சென்சார்கள், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் மூலம் வேளாண் நிலத்தின் தற்போதைய நிலை, வேளாண் பயிரின் வளர்ச்சி , ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவற்றினை மிகச்சரியாகக் கண்டறிந்து, வளங்களை திறம்பட பயன்படுத்த முடியும். இது வேளாண்பயிர்களுக்கான உற்பத்தி செலவுகளை குறைப்பதுடன், வேளாண்மையில் அதிக மகசூல் பெறவும் உதவுகிறது.
சொட்டு நீர்பாசனமும் தெளிப்பு நீர்ப்பாசனமும் (Drip and Sprinkler Irrigation)

பருவக்காற்றை நம்பியே தமிழ்நாட்டின் வேளாண்மை உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறையே தமிழ்நாட்டின் மிகப்பெரிய சவாலாகும். அதற்கான நவீன தொழில்நுட்பத்தின் வாயிலான தீர்வாக சொட்டு நீர்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற தொழில் நுட்பங்கள், தண்ணீரை நேரடியாக வேளாண் பயிரின் வேர்களுக்கு வழங்குவதன் மூலம், தண்ணீரின் பயன்பாட்டை 50% வரை குறைக்கின்றன. இது குறைந்த தண்ணீரில் அதிக வேளாண்பயிர் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
உழவன் செயலி (Uzhavan App)
தமிழ்நாடு அரசின் உழவன் செயலி எனும் பயன்பாடானது, உழவர்களுக்கு வானிலை முன்னறிவிப்பு, வேளாண் விளை பொருட்களுக்கான சந்தையின் விலை, அரசு திட்டங்கள், பயிர் பாதுகாப்பு ஆகியன குறித்த தகவல்களை வழங்குகிறது. இது உழவர்களை தம்முடைய வேளாண் பயிர்களுக்கு தேவையான சரியான விவரங்களை அறிந்து கொண்டு மிகச்சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்தல்
காலநிலை மாற்றம் தமிழ்நாட்டின் வேளாண்மைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். வறட்சி, வெள்ளம், எதிர்பாராத மழைப் பொழிவு ஆகியன வேளாண்மை உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ள, பின்வரும் நடவடிக்கைகள் அவசியமாகும்

அனைத்து காலநிலைகளை தாங்குகின்ற வேளாண் பயிர் வகைகள்
வறட்சியைத் தாங்கும் நெல் வகைகள், அதிக வெப்பத்தைத் தாங்கும் சிறுதானியங்கள் போன்ற வேளாண்பயிர் வகைகளை உருவாக்குவதும், பரவலாக்குவதும் அவசியமாகும்.
மழைநீர் சேகரிப்பு
ஏரிகள், குளங்கள் போன்ற, நீர்நிலைகளை மீட்டெடுப்பதன் வாயிலாக பொழிகின்ற மழை நீரை சேமிப்பது, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உதவும். இது மழை பொழியாத வறண்ட காலங்களில் கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவற்றின் உதவியுடன் செய்யப்படுகின்ற வேளாண்மைக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும்.
பண்ணை மேலாண்மை
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பண்ணை மேலாண்மை முறைகளை (எடுத்துக்காட்டாக, பல்வேறு வேளாண் பயிர்களை கலந்து பயிரிடுவது, சுழற்சி முறையில் வேளாண் பயிரிடுவது) பின்பற்றுவதன் மூலம், இயற்கை இடர்களின் பாதிப்பை குறைக்கலாம்.
இலாபகரமான வேளாண்மைக்கான புதிய மாதிரிகள்
தற்போதைய சூழலில் வேளாண்மையை ஒரு இலாபகரமான தொழிலாக மாற்ற, புதிய வணிக மாதிரிகளுக்கு மாறவேண்டிய தேவையேற்படுகின்றது.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் (Value-Added Products)

உழவர்கள் தங்களுடைய வேளாண் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்குப் பதிலாக, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக (உதாரணமாக, நெல்லை அரிசியாக, அரிசியை மாவாக, பழங்களை சாறாக அல்லது பழக்கூழாக) மாற்றுவதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம்.
வேளாண்மை சுற்றுலா (Agri-Tourism)
வேளாண்மை செய்யப்படுகின்ற நிலங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவதன் மூலம், உழவர்கள் கூடுதல் வருமானம் பெறலாம். பொதுமக்கள் பாரம்பரிய வேளாண் செயல்முறைகளை நேரடியாகக் கற்றுக்கொள்ளவும், கிராமப்புற வாழ்க்கையை அனுபவிக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.
கூட்டான வேளாண்மை
உழவர்கள் பலர் ஒன்றாக இணைந்து தங்களின் வேளாண்மை தொடர்பான பணிகளான, தங்கள் விளை பொருட்களைச் சந்தைப்படுத்தவும், தொழில்நுட்பங்களை வாங்கவும், அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறவும் இதன்மூலம் முடியும். இது அவர்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டின் வேளாண்மையின் எதிர்காலமானது, புதுமையான நவீன தொழில்நுட்பங்கள், நிலையான நடைமுறைகள், உழவர்களின் கூட்டு முயற்சி ஆகியவற்றைப் பொறுத்தது ஆகும். அதனோடு அரசின் ஆதரவு, ஆராய்ச்சி நிறுவனங்களின் வழிகாட்டுதல், இளைஞர்களின் ஈடுபாடு ஆகியவை இம்மாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும். இதன் மூலம், தமிழ்நாடு வேளாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கமுடியும் என்பது திண்ணம்.