2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்த அரசியல் முடிவு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், “தை மாதம் முடிய இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தோல்வியடைந்த அதிமுகவிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் யார் எனும் கேள்வி எழுந்தது. அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து உருவான உள்கட்சிப் பிரச்சினைகளால் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உறுதியான முடிவை எடுக்காததும், கூட்டணி குறித்து உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தாத நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி அதிமுக மற்றும் திமுகவில் இணையத் தொடங்கினர்.
இதற்கிடையில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று ஓபிஎஸ் நம்பிக்கையுடன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “நான் அதிமுகவில் இணையத் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக்கொள்ளத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தை மாதம் முடிய இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன” என்றார்.
அப்போது, “ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா? திமுக அல்லது தவெகவில் இணைவாரா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “எந்த ஓபிஎஸ்?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.
