தகைசால் தமிழர் நல்லகண்ணுவிற்கு அரசு மரியாதை.. வீரவணக்கம் செலுத்திய முதல்வர்கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு நேற்று உடல்நலக் குறைவால் தனது 101ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை முதல் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இன்று பிற்பகல் அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்லகண்ணு உடலுக்கு வீரவணக்க முழக்கங்களை எழுப்பி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
இதையடுத்து, நல்லகண்ணுவின் விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு (மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி பயன்பாட்டுக்காக) ஒப்படைக்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
