ஏற்றுக்கொள்கிற விதத்தில் இருக்கிறதா?!
தெலுங்கில் நடிகர் பவன் கல்யாணுக்கென்று தனிப்பட்ட ரசிகர் வட்டம் உண்டு. ‘பத்ரி’, ‘குஷி’, ‘தம்முடு’ என்று அவர் ‘ப்ளாக்பஸ்டர்கள்’ தந்தபோதும் சரி; பின்னர் ‘குடும்ப சங்கர்’, ’பாலு’, புலி’, ‘பாஞ்சா’ என்று பெருந்தோல்விகள் தந்தபோதும் சரி; அந்த எண்ணிக்கை கூடியதே தவிரக் குறையவில்லை. அப்படிப்பட்ட ரசிகர்களால் இன்று அவர் ஆந்திராவில் வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் துணை முதலமைச்சராகவும் திகழ்கிறார்.
அரசியல் பணிகளுக்காகத் தான் ஒப்புக்கொண்ட படங்களைப் பாதியில் நிறுத்திய பவன் கல்யாண், சமீபகாலமாக அவற்றை ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில், ‘சாஹோ’ தந்த சுஜீத் இயக்கத்தில் அவர் நடித்த ‘தே கால் ஹிம் ஓஜி’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தில் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தார் பவன் கல்யாண். சரி, ‘தே கால் ஹிம் ஓஜி’ அதற்கு மாறான திரையனுபவத்தைத் தருகிறதா?

‘கேஜிஎஃப்’ போன்ற ‘பில்டப்’
ஜப்பானில் கேங்க்ஸ்டர் கும்பல் ஒன்று ரகசியமாகச் செயல்பட்டு வந்த சாமுராய் கூட்டத்தைத் திட்டமிட்டு அழிக்கிறது. அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கும் சிறுவன் ஓஜாஜ் கம்பீரா இந்தியா வருகிறார்.
கப்பலில் வருகையில், தங்க கட்டிகளை எடுத்துவரும் சத்யநாராயணனிடம் (பிரகாஷ்ராஜ்) இருந்து அவற்றைப் பறிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அவர்களை வெட்டிச் சாய்க்கிறார் கம்பீரா. அன்று முதல் அவரது செல்லப்பிள்ளை ஆகிறார்.
பம்பாயில் தனது பெயரில் ஒரு துறைமுகத்தை நடத்தி வருகிறார் சத்யநாராயணா. அதற்கு ஆபத்துகள் வரும்போதெல்லாம் முன்னே நின்று அவற்றைத் தடுக்கிறார் கம்பீரா (பவன் கல்யாண்). அப்படிப்பட்டவர், சத்யநாராயணாவின் மூத்த மகன் (ஷாம்) இறந்தபிறகு அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விடுகிறார்.
அதன்பிறகு சத்யநாராயணாவின் ஆட்கள் கம்பீராவைப் பல இடங்களில் தேடுகின்றனர். ஆனாலும் அவர்களுக்குக் கிடைக்கிற தகவல்கள் காலாவதியானவையாக இருக்கின்றன.
இந்த நிலையில், 1993இல் ஓம்கார் (இம்ரான் ஹாஸ்மி) ஒரு கண்டெய்னரில் சில பொருட்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். கடற்படை கெடுபிடிகளால் கப்பல் சத்யநாராயணாவின் துறைமுகத்தை வந்தடைகிறது. அங்கிருந்து அந்த கண்டெய்னரை எடுத்துச் செல்ல வரும் ஓம்காரின் தம்பி ஜிம்மி (சுதேவ்), சத்யநாராயணாவின் இளைய மகனைச் சுட்டுக் கொல்கிறார். ஆனாலும், அவரால் கண்டெய்னரை கைப்பற்றை முடியாமல் போகிறது.
இதையடுத்து, துறைமுகத்தைக் கவனிக்க வைக்கும் பொறுப்பை மூத்த மருமகள் கீதாவிடம் (ஸ்ரேயா ரெட்டி) கொடுத்துவிட்டு ரகசியமாக ஒரு இடத்திற்குச் செல்கிறார் சத்யநாராயணா.
அந்த இடத்தைக் கண்டுபிடித்துவிடும் ஜிம்மியின் ஆட்கள், அங்கு சத்யநாராயணாவைக் கொல்லக் களமிறங்குகின்றனர்.
அந்த இடத்தில் தான் கம்பீரா தனது மனைவி கண்மணி (பிரியங்கா அருள்மோகன்) மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ஜிம்மியின் ஆட்களால் கம்பீராவின் அமைதியான வாழ்க்கை குலைந்ததா? சத்யநாராயணாவின் உயிருக்கு வந்த ஆபத்தை கம்பீராவால் தடுத்து நிறுத்த முடிந்ததா என்று சொல்கிறது ‘தே கால் ஹிம் ஓஜி’யின் மீதி.
பல்வேறு காலகட்டங்களில் நிகழ்வதாக உள்ள காட்சியமைப்பு, இப்படத்தைச் செறிவுடன் திரையில் சொல்ல உதவியிருக்கிறது. கூடவே, கேஜிஎஃப் பட பாணியில் ‘ஹீரோயிச பில்டப்’பையும் வாரியிறைத்திருக்கிறது ‘தே கால் ஹிம் ஓஜி’. அது சில இடங்களில் எடுபடுகிறது; சில இடங்களில் அதீதமாக இருக்கிறது.
அனைத்தையும் தாண்டி, பல லாஜிக்மீறல்களை கடந்து இப்படத்தை ரசிக்க முடிவது ஆறுதல் தரும் விஷயம்.

பவன் கல்யாணுக்கு ஜே..!
படம் முழுக்க ‘பவன் கல்யாணுக்கு ஜே’ என்று சொல்வதற்குப் பதிலாக, அனைத்து பாத்திரங்களும் ‘கம்பீரா..’, ‘ஓஜி’ என்று முழங்குகின்றன. பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, சுபலேக சுதாகர் தொடங்கி வில்லன் கூட்டத்தில் இருக்கும் தேஜ் சப்ரு உட்படப் பலரும் இதையே படம் முழுக்கச் சொல்கின்றனர்.
அது போதாதென்று இயக்குனர் சுஜீத் ஏற்றும் ‘பில்டப்’ தனிக்கதை.
அதனால், பவன் கல்யாண் தனது ரசிகர்கள் மனம் மகிழ்கிற வகையில் திரையில் தோன்றியிருக்கிறார். இரண்டாண்டு இடைவெளியில் சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அது ஒரு குறை.
நாயகி பிரியங்காவுக்கு பெரிதாக வேலை இல்லை. கொடுத்த காட்சிகளில் பாந்தமாக நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
இதில் வெங்கட், ஷாம் போன்றவர்களுக்குப் பெரிதாக வேலை இல்லை.
தேஜ் சப்ரு, அவரது மகன்களாக வரும் இம்ரான் ஹாஷ்மி, சுதேவ் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கின்றனர். அர்ஜுன் தாஸின் இருப்பும் அப்படியே. ஆனால், அதனை இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டியிருக்கலாம்.
அஜய் கோஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் இரண்டொரு காட்சிகளில் ‘இங்க பாருப்பா’ என்கிற விதமாக வசனம் பேசிச் செல்கின்றனர். ராகுல் ரவீந்திரன், ஹரிஷ் உத்தமன் வேறு இதில் இருக்கின்றனர்.
இவர்கள் போதாதென்று ஜாக்கி ஷெராஃப், லால் ஆகியோர் ஒரு காட்சிக்கு வந்துவிட்டுப் போகின்றனர்.
’மீதமிருக்கிற புட்டேஜை அடுத்த பார்ட்டுக்கு வச்சுக்கலாம்’ என்ற ஐடியாவில் ஏகப்பட்ட பேரைத் திரையில் இயக்குனர் சுஜீத் நடமாடவிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.
ரவி கே.சந்திரன், மனோஜ் கே பரமஹம்சாவின் ஒளிப்பதிவு இப்படத்திற்குப் பெரும்பலம். எங்கும் இருவரது பணியையும் நம்மால் வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை.
ஆனாலும், இரண்டாண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட பவன் கல்யாணின் அறிமுகச் சண்டைக்காட்சி ’ஆவ்சம்’ ரகம்.
ஏ.எஸ்.பிரகாஷின் தயாரிப்பு வடிவமைப்பு, படத்தின் விஎஃப்எக்ஸை மனதில் வைத்து பின்னணியை வடிவமைக்க உதவியிருக்கிறது.
நவீன் நூலியின் படத்தொகுப்பு ஒவ்வொரு காட்சியையும் சரியான அளவில் திரையில் செதுக்கியிருக்கிறது.
படம் முழுக்க ரசிகர்கள் ’கூஸ்பம்ஸ்’ ஆக வேண்டுமென்ற நோக்கில் பின்னணி இசையை வாசித்து தள்ளியிருக்கிறார் தமன். அவரது இசையால் ‘கம்பீரமான’ உருவத்தைப் பெற்றிருக்கிறது ‘தே கால் ஹிம் ஓஜி’.
இயக்குனர் சுஜித் இப்படத்தை ‘கேஜிஎஃப்’ பாணியில் தந்திருக்கிறார். அந்த கதை சொல்லலுக்கு ஏற்ற பாத்திர வார்ப்பையும் காட்சிகளையும் உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார். காட்சியாக்கத்தில் அவை சரியாகப் பிரதிபலிக்க வேண்டுமென்பதில் உறுதி காட்டியிருக்கிறார். அதுவே இப்படத்தின் பலம்.
மற்றபடி, இதில் நிறைய லாஜிக் மீறல்கள், காதில் பூ சுற்றுகிற கதை சொல்லல் உட்படப் பல குறைகள் உண்டு.
ஒரு பாடல் காட்சியில் பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாகக் காட்டப்படுகிறது. இடையே பவன் கல்யாண் உடன் அவர் குழந்தையோடு இருக்கிற ஷாட் வந்து போகிறது. பிறகு, பிரசவம் நடப்பது காண்பிக்கப்படுகிறது. இப்படிச் சில குறைகள் உண்டு.
இவற்றை மீறி பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடுகிற அளவில் இப்படம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இப்படத்தில் இன்னொரு பெரிய குறை, அதீத வன்முறை நிறைந்த காட்சியாக்கம். அதற்காகவே ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எல்லாம் சரிதான்.
ஆனால், ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கிற ஒருவரது படத்தில் இவ்வளவு வன்முறை காட்சிகள் அவசியமா? அப்படியொரு கதையில் அவர் நடிக்க வேண்டுமா?
பவன் கல்யாணின் சமகாலப் போட்டியாளராக இருந்த மகேஷ் பாபு, இன்றுவரை தனது படங்களில் வன்முறை பெரியளவில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்கிறார். சமூகப் பிரச்சனை சார்ந்த கதைகளுக்கு, காட்சியாக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்.
அதற்குத் திரையில் பதிலளிப்பதை விட்டுவிட்டு, ‘மான் 90 கிலோமீட்டர் வேகத்துல ஓடினாலும், அறுபது கிலோமீட்டர் வேகத்துல ஓடுற புலிகிட்ட அது மாட்டிக்கிடும். ஏன்னா, புலி மேல இருக்கிற பயம்’ என்று ‘பஞ்ச்’ அடிக்கிறார் பவன் கல்யாண்.
வெறுமனே தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மட்டுமே பவன் கல்யாண் இருந்திருந்தாதால் ‘தே கால் ஹிம் ஓஜி’ படத்தை இப்படிக் குறை சொல்லக் கூடாது. பதிலாக, ’பதினெட்டு வயசுக்கு கீழே இருக்குறவங்க பார்க்காதீங்கப்பா’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால், துணை முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிற ஒருவரிடம் இருந்து இப்படியொரு வன்முறை நிறைந்த ‘கமர்ஷியல் படம்’ வருகிறது என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.