கணவர் மூலம் லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை உதவி ஆணையர் அதிரடி கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் வணிகவரித் துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அபினேஷ் என்பவர், தனது நிறுவனம் சார்பில் அதிகமாகச் செலுத்திய உள்ளீட்டு வரியை (Input Tax) திரும்பப் பெற விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், அந்த வேலையை முடித்துத் தர ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மகேஸ்வரி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அபினேஷ், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறியதால் ரூ.60,000-வரை கொடுப்பதாக பேரம் பேசப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், லஞ்சம் கொடுக்க வேண்டுமா என்று யோசித்த அபினேஷ், இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனப் பொடி தடவிய பணத்துடன் அபினேஷ் சென்றார். உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் என்பவரின் மொபைல் எண்ணைக் கொடுத்து, லஞ்சப் பணம் ரூ.60,000-ஐ அவரிடம் கொடுக்கும்படி தெரிவித்தார்.

அபினேஷ் அழைத்த போது கொடிசியா மைதானம் அருகில் இருப்பதாகக் கூறிய தனசேகரன், அங்கு வருமாறு தெரிவித்தார். தனசேகரன் இருந்த இடத்திற்குச் சென்ற அபினேஷ், காரில் ஏறி அமர்ந்து பணத்தைக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தனசேகரனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

விசாரணையில் அவர் வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனசேகரனை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வணிகவரித் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் தனசேகரன் என இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share