பத்ரி ரைனா
இந்தியக் குடியரசு சர்வாதிகாரப் பாதையின் விளிம்பில் தடுமாறிக்கொண்டிருக்கிறது
வரலாற்றில் சில சமயங்களில், நேர்மையற்ற தந்திரம் குறித்த விவாதத்தில் ஈடுபடுவதற்கான அழைப்பு, அதற்கு உடந்தையாக இருப்பதற்கான அழைப்பாக அமைந்துவிடும். 1975ஆம் ஆண்டின் அவசரநிலைச் சட்டத்தின் சாதகமான அம்சங்களைப் புகழ்ந்து கூறப்பட்ட பல வாதங்களை எண்ணிப் பாருங்கள்:
ரயில்கள் குறித்த நேரத்தில் இயங்கின; அலுவலகத்துக்குத் தாமதமாக வர யாரும் துணியவில்லை; சில்லறைப் பிரச்சினைகள் தொடர்பான பொதுப் போராட்டங்கள் நின்றுபோயின; தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்தது… இன்னும் பல.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் 130ஆவது அரசியலமைப்புத் திருத்தம், நடுத்தர வகுப்பினருக்குப் பிடித்தமான சட்டம் என்று வாதிடுகிறது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை எந்தவொரு நபரும் குற்றவாளி என்று கருதப்படக் கூடாது என்ற அரசியலமைப்பு விதியைப் புறந்தள்ளி, உயர் பதவிகளில் உள்ளவர்களின் ஊழலுக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை வழங்குவதே இந்தச் சட்டத் திருத்தத்தின் ஒரே நோக்கம்.
குற்றம்சாட்டப்பட்டவர்களை இவ்வளவு கடுமையாக அணுக வேண்டும் என்று சொல்லும் இதே புனிதர்கள், அமெரிக்க நீதி அமைப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தொழிலதிபருக்குச் சம்மன் அனுப்புவதற்குத் தயங்குகிறார்கள். காரணம், அந்தத் தொழிலதிபர் ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருங்கிய நண்பர்.
1970களின் நடுப்பகுதியில் இருந்த அவசரநிலையும் சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகிய நோக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனாலும், அவற்றை அமல்படுத்துவதற்கான உள்நோக்கம் வேறு என்பது எல்லோருக்கும் தெரியும்.
அரசு அமைப்பிலும் குடியரசின் மீதும் அது ஏற்படுத்திய பேரழிவுகள், படுபயங்கரமானதாக இருந்தன என்பதை விரைவிலேயே பார்க்க முடிந்தது.
அப்போது பிரதமராக இருந்தவர், தான் செய்த தவறுக்கு வருந்தி, மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தான் தோற்பதற்கான வாய்ப்பு இருப்பதை அறிந்தும், தன் நண்பர்களின் ஆலோசனையை மீறித் தேர்தலை அறிவித்தார்.
இந்திரா காந்தியின் அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வாழ்க்கையில் குறுகிய மோசமான காலகட்டமாக எப்போதும் நினைவில் இருக்கும். கடந்த பதினொரு ஆண்டுகளின் ஆட்சி, இன்றைய ஆட்சியாளர்கள் இந்தியாவில் நிரந்தரமான, தளைகளற்ற நிர்வாக மேலாதிக்கத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவ்வகையில் இது மறக்க முடியாத நீண்டகால வேதனையாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.

நியாயமான அல்லது தவறான வழியில் ஒருமுறை அரசு அதிகாரத்தைப் பெற்றால், அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க விரும்பாத வெறித்தன்மையால்தான் சர்வாதிகாரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியாவில் உள்ள ஒரு தேர்தல் அதிகாரியைத் தனக்காக பதினோராயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைச் சரிசெய்யும்படி வற்புறுத்தியதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
அஸ்திவாரத்தை அசைக்கும் நடவடிக்கை
தற்போது பாஜக முன்மொழிந்துள்ள சட்டத் திருத்தம், பெருகிவரும் புயலுக்கான கடுமையான எதிர்வினையாகவும், பாஜகவின் கூட்டாளிகளுக்கு எந்தத் தவறான யோசனைகளும் இருக்கக் கூடாது என்று எச்சரிப்பதற்கான சர்வாதிகார முறையாவும் தெரிகிறது. “மக்களால்” அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை ரத்து செய்வதற்கான “சட்டபூர்வமான” வழியைக் கண்டுபிடிப்பதாகவும் தெரிகிறது.
முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தத்தின் விதிகள், பாஜக முதல்வர் அல்லது சாதாரண அமைச்சரைக்கூடத் தண்டிக்கவும் பயன்படுத்தப்படும் என்று சொன்னால் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்கூட நம்ப மாட்டார்கள். ஆனால் நகர்ப்புற வலதுசாரிகள், இந்தத் திருத்தத்தின் கீழ் பிரதமர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று வாதிடுவதில் மும்முரமாக இருக்கின்றனர். சட்டத்தின் விதிகள் எப்படி இருந்தாலும் நடைமுறை எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்தியக் குடியரசு சர்வாதிகாரப் பாதையின் விளிம்பில் தடுமாறிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. பெருநிறுவன ஊடக நிறுவனங்கள் நெருங்கிவரும் இந்தப் பேரழிவை உணர்ந்துகொண்டு, அதற்கேற்பத் தங்கள் பொறுப்பை மறுவரையறை செய்துகொள்ள இதுதான் சரியான நேரம். இப்போது இல்லையென்றால் வேறு எப்போது?
இந்த விவகாரத்திலும் பிற விஷயங்களிலும் உண்மையை வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லும் துணிச்சலான மின்னணு ஊடகங்களுக்கும் நேர்மையுடனும் ஆழ்ந்த பார்வையுடனும் எழுதுபவர்களுக்கும் இந்த நாட்டு மக்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் மக்கள் இயக்கம் ஒன்று தோன்றியது. அது அரசியல் சூறாவளியைக் கிளப்பி அரியணையை ஆட்டம்காணச் செய்தது. தற்போது பிகாரில் நடந்துவரும் அமைதியான வெகுஜனப் போராட்டம், அத்தகைய மக்கள் இயக்கம் மீண்டும் உருவாவதன் அறிகுறியாக இருக்குமா?
காலம் விரைவில் பதில் சொல்லும்.
கட்டுரையாளர்:
பத்ரி ரைனா, தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பித்தவர்.
நன்றி: தி வயர் இணைய இதழ்