தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசினார். அப்போது அவர் ஒன்றிய அரசை நோக்கி முன் வைத்த 10 கேள்விகள்:
- தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட புதிய சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களை பார்க்கும்போது இது நாள் வரை நாடெங்கும் உரத்த குரலில் ஒலித்துக் கொண்டிருந்த கோ ஆப் ரேட்டிவ் ஃபெடரலிசம் என்பது வெற்று முழக்கம் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?
- நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் என அனைத்து வகை குறியீடுகளிலும் முதன்மை பெற்ற மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் மீது புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி திணிப்பை மீண்டும் கையில் எடுத்து பிஞ்சு குழந்தைகளின் கல்வியையும், ஆசைகளையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்திடும் ஒன்றிய அரசின் செயல் மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?
- வாரம் வாரம் நடைபெறும் ஒன்றிய அமைச்சரவையின் கூட்ட முடிவுகளில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிவேக நெடுஞ்சாலை வழித்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை பார்த்தால் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற கூற்றினை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறதா?
- பறந்து விரிந்த இந்திய தேசத்தை ஒன்றிணைப்பதில் ரயில்வேயின் பங்கு மிக முக்கியமானது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூட கருதுகிறார்கள். ஆனால் புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?
- தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த கோரிய தமிழ்நாடு அரசின் முன் மொழிவுகள், தலைநகர் டெல்லியிலே கடந்த 20 மாதங்களாக நீண்ட உறக்கத்திலே உறைந்து போயிருக்கிறதே காரணம்? என்ன நியாயம் தானா? அதேநேரம் உத்தரபிரதேச மாநிலத்தில் தலைநகர் லக்னோ தவிர ஆக்ரா, கான்பூர், நொய்டா ஆகிய மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனவே? மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை அடுத்து பூனே, நாக்பூர் மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறதே? குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தவிர சூரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை? மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை கோவை, மதுரை மாநகரங்களுக்கு கேட்டோம்.தொழில் வளம் மிக்க கோவை மாநகரத்தை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள். ஆனால் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று சொல்லக்கூடிய அன்னை மீனாட்சி அருள்பாலிக்க கூடிய ஆன்மீகத்தலமாக இருக்கும் மதுரையம்பதிக்கும் கூட நீங்கள் மெட்ரோ ரயில் தருவதற்கு மறுக்கிறீர்களே? இதனால் உங்களோடு இன்று இணக்கமாக கூட்டணியில் இருக்கும் செல்லூர் ராஜு சினம் கொள்ள மாட்டாரா? உதயகுமார் மனம் உடைந்து போக மாட்டாரா? அங்கிருக்கும் ராஜன் செல்லப்பாவை பார்த்து மதுரை மக்கள், ‘செல்லப்பா இதை கொஞ்சம் சொல்லப்பா’ என்று யாரும் கேட்க மாட்டார்களா? என்றார். மேலும் எங்களுக்காக இல்லை என்றாலும் உங்களோடு வந்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் மதுரை மாவட்டத்திற்காகவாவது உங்களது கடைக்கண் பார்வையை திருப்பி இருக்கக் கூடாதா? இல்லை.. அங்கயற்கண்ணியின் பார்வையே போதும், ஆளக்கூடியவர்களின் பார்வை தேவை இல்லை என்ற முடிவில் நீங்கள் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.
- நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டப்படும் வீடுகளுக்கு தமிழ்நாடு அரசு 90 சதவிகிதம் நிதி வழங்குகிறது. ஒன்றிய அரசு 10% மட்டும் நிதி வழங்குகிறது. அதேபோல் கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 30 சதவிகிதம் மட்டுமே நிதி வழங்கும் நிலையில் மீதமுள்ள நிதியை எல்லாம் வழங்குவது தமிழக அரசுதான். ஆனால் தமிழ்நாட்டின் நிதி மற்றும் தமிழர்களின் உழைப்பை பயன்படுத்தி கட்டப்படும் வீடுகளுக்கு பிரதம மந்திரியின் உடைய பெயரை நீங்கள் வைத்துக் கொள்கிறீர்கள். அது பரவாயில்லை.. ஆனால் நாங்கள் கேட்பது.. ஏன் அதற்கான உரிய நிதியை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறீர்கள்?
- 75 லட்சம் கிராமப்புற ஏழை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி 975 கோடியை இன்னும் தர மறுக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புற பொருளாதாரத்தையே சிதைப்பது தான் உங்கள் நோக்கமா?
- தேசிய சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்காக ஒன்றிய அரசு வழங்கும் தொகை ரூ.200 மட்டுமே. விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது ரூ.300 மட்டும். ஆனால் மாநில அரசு வழங்குவது ரூ.1200. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் குடிசைகளில் வாழும் ஏழைக் குடும்பங்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படும் திட்டங்களுக்கு புரியாத மொழியில் நீட்டி முழக்கி பெயர் வைப்பதுதான் உங்களுக்கு வழக்கமா?
- நாடெங்கும் வாழும் மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் இன்று வறண்டு கிடக்கிறது தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய ரூ. 3,709 கோடி நிதி இன்னும் வரவில்லை. ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டிய ஒன்றிய அரசு அவர்களுக்கு தண்ணீருக்கு பதில் கண்ணீரை பரிசளிப்பது முறையாக இருக்குமா?
- நாட்டு மக்களின் மக்கள் தொகையில் 6.1 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து 10 சதவிகிதம் வகிக்கும் தமிழ்நாடு ஒன்றிய அரசிடமிருந்து வெறும் 4 % நிதியை பெறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு உகந்ததா? என தங்கம் தென்னரசு சரமாரியான கேள்விகளை முன் வைத்தார்.