தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழக அரசை ஸ்தம்பிக்க வைத்து விடலாம் என்ற பகல் கனவில் ஒன்றிய அரசு எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் தடைக்கற்களை தூளாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத்தில் துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழகம் 14 வருடங்களுக்கு பின் 11.19 சதவிகிதம் என்ற இரட்டை இலக்கத்தை எட்டி உள்ளது.
அரை நூற்றாண்டுக்கு மேலாக கல்விக்காக ஒரு உறுதியான கட்டமைப்புகளை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதியினை தொடர்ச்சியாக வழங்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசு ஏறத்தாழ ரூ.4000ம் கோடிக்கும் மேலாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுத்து கல்வி உரிமை சட்டத்திற்கு உரிய ரூ.450கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. இதுவும் பல போராட்டத்திற்கு பிறகு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் குடிக்கும் தண்ணீருக்கான நிதியையும் ஒன்றிய அரசு தர மறுக்கிறது. தமிழக அரசு பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ஜல்ஜீவன் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ரூ.3,407 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஒன்றிய அரசின் பங்குத்தொகையையும், மாநில அரசே விடுவித்து வருகிறது. இது தமிழக அரசின் நிதி நிர்வாகத்தின் மீது மிகப்பெரிய அழுத்ததை தருகிறது.
இதனால் ஒன்றிய அரசு அரசியல் காரணங்களை தாண்டி உடனடியாக இந்த நிதிகளை விடுவிக்க வேண்டும்.
மேலும் 2014 இல் இருந்து 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு ரூ. 7.5 லட்சம் கோடி நிதி பங்களிப்பு செய்துள்ளது. ஆனால் வரி பகிர்வாக 2.85 லட்சம் கோடி மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது. இது மூன்றில் ஒரு பங்கு நீதி பகிர்வாகும்.
உத்தரப் பிரதேசத்தை பொருத்தவரை ரூ.3.07 லட்சம் கோடி நிதி பங்களிப்பு செய்தது. ஆனால் உத்தர பிரதேசத்திற்கு ரூ.10.6 லட்சம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.
இது அப்பட்டமாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு செய்யக்கூடிய மாபெரும் ஓர வஞ்சனை.
மேலும் ஒன்றிய அரசு அடுக்கடுக்காக எந்த கஷ்டங்களை கொடுத்தாலும், நிதியை குறைத்து தமிழக அரசை ஸ்தம்பிக்க வைத்து விடலாம் என்ற பகல் கனவில் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் தடைக்கற்களை தூளாக்குவோம். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.