தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை இரும்பு பாலம் அமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 3) ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக அண்ணா சாலை உள்ளது. குறிப்பாக சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பீக் நேரத்தில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்தநிலையில் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே ரூ.621 கோடியில் 3.2 கி.மீ. நீளத்துக்கு நான்கு வழிச்சாலையாக உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த வழியில் மெட்ரோ சுரங்கப்பாதை உள்ளது. எனவே, இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
அதாவது வழக்கமான பாலங்கள் கான்கிரீட்டில் தான் அமைக்கப்படும். ஆனால் இந்த பாலம் இரும்பு தூண்களால், மெட்ரோ சுரங்கத்துக்கு மேலே அமைக்கப்படுகிறது.
இரும்புத் தூண்கள் தொழிற்சாலையிலேயே தயார் செய்யப்பட்டு, கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்படுகின்றன. இந்த மேம்பாலத்தின் எடை மற்றும் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வு ஆகியவற்றால், கீழே இருக்கும் சுரங்கப்பாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைகப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் மேலாக, நேரடியாக கட்டப்படும் உலகின் முதல் பாலம் இதுவாகும்.
இந்தநிலையில் இரும்பு பேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பாலத்தின் தளம், தூண்கள் மற்றும் இணைப்புக் கட்டுமானங்களின் உறுதித்தன்மையை நேரில் பார்வையிட்டார். அப்போது மேம்பால பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
