புத்தகத்தின் பெயர்- தீயின் சாட்சியம் (Testimony by Fire)
ஆசிரியர் – அதுல்யா மிஸ்ரா
வெளியீட்டாளர் – ரூபா பப்ளிகேஷன்ஸ்
கிடைக்குமிடம் – இந்தியாவின் அனைத்து முன்னணி புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்

இலைகளின் சலசலப்பை போல, மழையின் மணத்தை போல சில கதைகள் அமைதியாக துவங்கும். அதுபோலத்தான் அதுல்யா மிஸ்ராவின் ‘தீயின் சாட்சியம் (Testimony by Fire)’ தமிழ்நாட்டின் குரங்கணி மலைகளின் ஆழத்தில் இருந்து துவங்குகிறது.
ஆரம்பத்தில் “ரஞ்சி” ஒரு அரசியல்வாதியோ அல்லது துறவியோ இல்லை. “ரஞ்சி” ஒரு சாதாரண இளைஞன், சுற்றுலா வழிகாட்டி, காடு தான் அவனுடைய வசிப்பிடம். ஒவ்வொரு பறவையின் குரலும், ஒவ்வொரு பனிமூட்டிய பாதையும் அவனுக்குத் தெரியும். நிலத்தின் மீதும், உயிர்களின் மீதும் அவன் வைத்திருந்த அன்பின் காரணமாக அவன் வழிநடத்துவான் என்ற நம்பிக்கையுடன் மலையேறுபவர்கள் அவனை பின்தொடர்வார்கள்.

ஆனால், ஒரு கோடைகால வெயில் சுட்டெரிக்கும் நாளில் இவை அனைத்தும் மாறியது. ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாக மாறுகிறது. குரங்கணி மலைச்சரிவின் அடர்ந்த காட்டுப்பகுதி பற்றி எரிகிறது. காய்ந்த இலைகளை தாண்டிய தீ பச்சை மரங்களையும் பதம் பார்த்து பயங்கரமாய் பரவி, புகை வானை இருளாக்குவது போல் மூடுகிறது.
பல குழப்பங்கள் தலையில் ஓட என்ன செய்வதென்று தெரியாமல் திணறி நின்றான் ரஞ்சி. அப்போதும் மனம் தளராமல் உடனடியாக சிந்தித்து கூச்சலிட்டு அனைவரையும் வழிநடத்தி. காயமடைந்தவர்களை சுமந்து சென்று பதினொறு உயிர்களை காப்பாற்றினான். தீ அடங்கும்போது பல உயிர்களின் சத்தமும் அடங்கி போகிறது.

அதன்பின் தான் இவ்வுலகம் எவ்வளவு கொடியது என்பது அவனுக்கு புரிகிறது. அவனால் நிகழாத ஒரு விபத்துக்கு அவனே காரணம் என கைக்காட்டி ரஞ்சியை போலீசார் கைது செய்கின்றனர். உண்மை தனது நேரம் வரும் வரை காத்திருந்தது. ஆம் அவனால் காப்பாற்றப்பட்டவர்கள் அவனுக்காக பேசினர். தீப்பிழம்பு புகையிலிருந்து மக்களை காப்பாற்ற அவன் எழுந்தது போல உண்மையும் அவனை காப்பற்ற கொதித்தெழுந்து. அதன்பின் ரஞ்சி அனைவராலும் பாராட்டி கௌரவிக்கப்படுகிறான். அது மட்டுமின்றி அமைதியான வழிகாட்டி தான் தைரியத்தின் சின்னமாக மாறுகிறான்.
பிறகு ஆசையோடு வனத்துறையில் சேர்ந்து பெருமையோடு பச்சை சீருடையை அணிந்து பணியாற்ற துவங்குகிறான். தன்னுடைய மனசாட்சிபடி கடமை நேர்மையோடு தான் வேலை பார்க்கிறான். ஆனால் எப்போதும் உண்மையான போராட்டம் தீப்பிழம்புகளோடு இருப்பதில்லை அது பணியிடத்தின் அமைதியில், பணியின் இருக்கும் கடமையில், அவனின் நேர்மையில் கூட இருக்கலாம் என்பதை வாழ்க்கை அவனுக்கு உணர்த்துகிறது. அதிகாரத்தை எப்படி அனுசரித்து செல்ல வேண்டும் என்பதை குரங்கணியில் இருந்து வந்த பதின்ம வயது இளைஞன் மெதுவாக கற்றுக்கொண்டு விவரமடைந்த ஆளாக மாறுகிறான். ஆண்டுகள் கழிந்து விதி அவனை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். ஏன் ரஞ்சி இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கூட மாறலாம். ஆனால், அவனுடைய ஆழ்மனம் என்றுமே காடுகளில் தான் இருக்கும்.
மதுரை முதல் ராமேஸ்வரம் வரை, தனுஷ்கோடியின் சிதிலமடைந்த பகுதி முதல் சென்னையின் சுறுசுறுப்பான தெருக்கள் வரை தமிழ்நாட்டின் உயிருள்ள வேண்டுதல் போல இந்த நாவல் வரையப்படுகிறது. தப்பாட்டத்தின் தாளங்கள், ஃபில்டர் காபியின் மணம், கடலின் உப்புத்தன்மை.
ஆனால், ரஞ்சியின் பயணம் அங்கே முடியவில்லை. அவன் அதையும் தாண்டி செல்கிறான். மத்தியப் பிரதேசத்தின் புல்வெளிகள், வாராணசியின் புனிதக் கரைகள், கொல்கத்தாவின் நெரிசலான தெருக்கள், அமைதியான சிக்கிம் மடங்கள் என அவன் எங்கெல்லாம் போகிறானோ அங்கெல்லாம் அவன் பேசுகிறான் அதே சமயம் நிறைய கேட்டு தெரிந்து கொள்கிறான். அவன் வெறும் இடங்களுக்கு மட்டும் பயணப்படுவதில்லை, இதயங்களின் பயணியாக மாறுகிறான்.

வட இந்தியாவில் அவனை ஒரு தலைவனாக பார்க்கிறார்கள். இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அவனை ஒரு துறவியாக பார்க்கிறார்கள். தெற்கிந்தியாவில் அவனை தங்கள் சொந்தமாக மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த அத்தனை பேரும் சேர்ந்த ஒருவன் தான் ரஞ்சி. தமிழ்நாட்டின் உறுதியை, எளிமையை, நம்பிக்கையை இந்தியா முழுவதும் பாடமாக கொண்டு சென்று பரப்புகிறான்.
ஏனென்றால் இந்த புத்தகம் வெறும் ஒரு மனிதனின் உயிருக்கான போராட்டம் பற்றியதல்ல ஒரு தேசம் தன்னுடைய பிரிவுகளிலிருந்தும், துயரங்களிலிருந்தும், முடிவில்லாத தீப்பிழம்புகளில் இருந்தும் எப்படி குணப்பட வேண்டும் என்பது பற்றியது.
இறுதியாக ரஞ்சி மீண்டும் ராமேஸ்வர கடற்கரையில் நிற்கும்போது, அவன் ஒரு உண்மையை தெளிவாக உணர்கிறான்.
“தீ அழிக்கிறது, ஆனால் அது சுத்தப்படுத்தவும் செய்கிறது.
நீர் மீதமுள்ளதை புதுப்பிக்கப் பாய்கிறது.”

அதுதான் “தீயின் சாட்சியம்” உங்களுக்கு கொடுக்கும் உணர்வு. நம்பிக்கை, பணிவு மற்றும் தைரியம் பெரும்பாலும் சத்தம் போடுவதில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. இதயத்துடிப்பைப் போல, அடை மழைக்குப் பிறகான மலைகளைப் போல அது அமைதியாக இருக்கும்.
எப்போதாவது நீங்கள் சோர்ந்து போவது போலவோ, வழிதவறியது போலவோ, வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடிக்க தேடுகிறவனாகவோ இருந்தால் இந்த கதையை வாசியுங்கள். இது உங்களை குரங்கணியின் தீப்பிழம்புகளில் இருந்து இந்தியாவின் ஆன்மாவிற்கும், அங்கேயிருந்து உங்களுக்குள் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் தீயின்பக்கமும் அழைத்துச் செல்லும்.
