“ராணுவத்தில் சேர உயரம் போதவில்லையே… ஆனால் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது” என்று நினைக்கும் இளைஞர்களுக்கு இதோ ஒரு செம்ம வாய்ப்பு. இந்தியாவின் பாதுகாப்புக் கவசமான மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிஆர்டிஓ-வின் செப்டம்-11 (CEPTAM-11) தேர்வின் மூலம் இந்தத் தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாடு முழுவதும் 764 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஐடிஐ முடித்தவர்களுக்கு இது உண்மையான ‘ஜாக்பாட்’.
பதவி என்ன?
டெக்னீசியன்-ஏ (Technician-A):
வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஃபிட்டர், வெல்டர் எனப் பல்வேறு ஐடிஐ தொழிற்பிரிவுகளின் கீழ் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த வேலைக்கு இரண்டு முக்கியத் தகுதிகள் அவசியம்:
- கல்வி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தொழிற்படிப்பு: அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சம்பந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (தேசிய வர்த்தகச் சான்றிதழ் – NTC அவசியம்).
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். (எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு).
சம்பளம் எவ்வளவு?
ஊதிய நிலை-2 (Pay Level-2) படி, மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோக டிஏ, வீட்டு வாடகைப்படி என இதர சலுகைகளையும் சேர்த்தால், கையில் தொடக்கச் சம்பளமே கணிசமாகக் கிடைக்கும்.
தேர்வு முறை எப்படி?
- கணினி வழித் தேர்வு (CBT): இதில் தேர்ச்சி பெறுவது முதல் படி.
- திறன் தேர்வு (Trade Test): இது தகுதித் தேர்வு (Qualifying Nature) மட்டுமே. உங்கள் ஐடிஐ பாடத்தில் உங்களுக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்று சோதிப்பார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் டிஆர்டிஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.gov.in என்ற தளத்தில் செப்டம் பகுதிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்:
பொது மற்றும் ஒபிசி ஆண்களுக்கு ரூ.100 கட்டணம். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது என்பது மகிழ்ச்சியான செய்தி.
மத்திய அரசின் நேரடிப் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. ஐடிஐ முடித்துவிட்டுத் தனியார் கம்பெனியில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பதை விட, கொஞ்சம் முயற்சி செய்து படித்து எழுதினால், லைஃப் செட்டில் ஆகிவிடும். வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
