ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து சாம்பியன் கோப்பையை பெற மறுத்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.
17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விளையாட்டு மைதானத்திலும் Operation Sindoor.. இந்தியாவுக்கே வெற்றி என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இறுதிப் போட்டியில் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு சாம்பியன் கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி அழைக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய வீரர்கள் கோப்பை மற்றும் பதக்கங்களைப் பெற மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கையில் கோப்பை இல்லாமலேயே இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடினர். ஏற்கனவே, இந்தியா- பாகிஸ்தான் போட்டிகளின் போது டாஸ் போடும் நிகழ்வுகளில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்க மறுத்தது விவாதப் பொருளானது குறிப்பிடத்தக்கது.