தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த TAPS ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசாணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ஆர். கலைமதி அமர்வில் இன்று ஜனவரி 6-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது அரசு தலைமை வழக்கறிஞர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார். அப்போது, அடுத்த 10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
