சுங்கக் கட்டண உயர்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர். tamilnadu 40 toll gate price hike
தமிழ்நாடு முழுவதும் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 1992ல் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதத்திலும், 2008ல் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பரிலும் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படும்.
இந்தநிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
அதன்படி நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர், வேலூர் பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை- வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சென்னை வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி,
அரியலூர் மணகெதி, திருச்சி கல்லக்குடி, வேலூர் வல்லம், திருவண்ணாமலை இனம்கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி, கோவை கனியூர் ஆகிய டோல்கேட்டுகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக ரீதியான இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கு இதுவரை 55 ரூபாய் வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் 85 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் டிரக் வாகனங்கள் செல்வதற்கு 120 ரூபாயில் இருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்று திரும்பி வருவதற்கு 180 ரூபாயில் இருந்து 185 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் 5 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகள் காலாவதியானது என்று சட்டப்பேரவையிலேயே தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரவாயல் சுங்கச்சாவடிகளை எடுத்துக் கொண்டோமானால் ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. இது காலாவதியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் கலெக்சன் செய்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 60 கிமீக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் நீக்கப்படும் என்று சொன்னார். பார்லிமெண்ட்டில் அறிவித்து மூனறு ஆண்டுகள் ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சொல்லப்போனால் சுங்கச்சாவடிகள் இருக்கிற சாலைகளில் தான் விபத்தே நடக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு மக்கள் போராட்டமாக உயரும். சுங்கக் கட்டண கொள்ளையை தடுக்கப்பட வேண்டும்” என்றார்.
புதுக்கோட்டையில் வாகன ஓட்டிகள் கூறுகையில், “5 ரூபாய்தான் அதிகரித்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறைக்கும் 5 ரூபாய் என்று கணக்கு போட்டு மாதத்துக்கு எவ்வளவு வரும் என்று பாருங்கள். நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. பெட்ரோல் டீசல் விலையும் அதிகமாக இருக்கிறது. இப்போது டோல்கேட் கட்டணமும் உயர்த்தப்பட்டால் வாகன ஓட்டிகள் என்ன செய்வது” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
“தமிழ்நாட்டில் 2023-24 நிதியாண்டு சுங்க சாவடிகள் மூலம் 4,221 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 2024-2025 டிசம்பர் மாதம் வரையில் 2,871 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 18,546 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது” என்று மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. tamilnadu 40 toll gate price hike