விஜய்யின் திமுக எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 13) திருச்சியில் 2026 தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். விமான நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தை கடக்க, 5 மணி நேரமாக தொண்டர்கள் வெள்ளத்தில் கடந்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
அங்கு திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார் விஜய். குறிப்பாக திருச்சிக்கு திமுகவின் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்னும் செய்யவில்லை. திருச்சியில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என் விமர்சனம் செய்திருந்தார்.
காவல்துறை கூடுதல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும்!
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “திருச்சி பிரச்சார பயணம் மூலம் வீட்டிலிருந்து அரசியல் செய்த விஜய், தற்போது வீக்கெண்ட் தலைவராக மாறியிருக்கிறார். நடிகருக்காக கூட்டம் கூடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் ஆச்சரியப்படும் பெரிய அளவில் கூட்டம் திரண்டு இருப்பது உண்மைதான். இவ்வளவு கூட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை. அவருக்காக திரளும் கூட்டம் ஒட்டு மொத்தமாக ஓட்டாகி விடுமா என்பது தெரியாது. ஆனால் இவ்வாறு திரளும் கூட்டத்தை சமூகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதில் விஜய் அக்கறை காட்ட வேண்டும்.
காவல் துறை 23 கட்டளை 43 கட்டளை என்று பிறப்பித்துவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது. எவ்வளவு கூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து எவ்வளவு கூட்டம் வந்தாலும் கூட்டத்தை நெறி முறைப்படுத்த வேண்டும். திரண்டு இருப்பது இளைய தலைமுறை. அவர்கள் மனம் நோகாதபடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கூட்டத்தை காவல் துறையினர் ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆளும் கட்சிக்கு கொடுக்கும் பாதுகாப்பை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும்.
விஜய்யின் திமுக எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். நடக்கப் போவது மாநில தேர்தல். ஆட்சி மாற்றம் தேவை. எனவே திமுக அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும். அதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் தொண்டு.
விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள். அதிக நாட்கள் அவர் மக்களை சந்திக்க வேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
விஜய்யின் வருகையால் பாதிப்பு இல்லை!
மதுரை புத்தக கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் அண்ணா, பெரியார் இல்லாமல் எந்த கட்சியும் செயல்பட முடியாது. விஜய்யின் அரசியல் வருகையால் யாருக்கும் பாதிப்பு இல்லை. திமுகவின் வாக்கு வங்கியும் பாதிக்காது” எனப் பேசினார்.