சென்னையில் நேற்று (அக்டோபர் 7) நடந்த லீக் ஆட்டத்தில் 56 – 37 என்கிற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு பிறகு அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டு தொடராக புரோ கபடி லீக் உள்ளது. அதன்படி 12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 69வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
முதல் 10 நிமிடத்தில் இரு அணிகளுமே சரிசமமாக களத்தில் மல்லுக்கட்டினர். அப்போது 13 -11 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் முன்னிலையில் இருந்தது.
அதன்பின்னர் தமிழ் தலைவாஸ் கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலின் அற்புதமான ரைடு மூலம் பாட்னா அணி பின் தங்கியது. அணியின் டிஃபென்ஸும் வலுவாக இருக்க அடுத்த 10 நிமிடத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 2 முறை ஆல்-அவுட் எடுத்தது. இதனால் தமிழ் தலைவாஸ் முதல் பாதி முடிவில் 30 – 19 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அதே கட்டுக்கோப்புடன் தமிழ் தலைவாஸ் விளையாட, ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 56 – 37 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.
இதில் கேப்டன் அர்ஜூன் மட்டும் மொத்தமாக 26 புள்ளிகளை எடுத்தார். அதே போல தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபென்ஸ் வீரர்கள் நிதேஷ் குமார் மற்றும் ஆஷிஷ் தலா 5 புள்ளிகள் எடுத்தனர். பாட்னா தரப்பில் அயன் 14 புள்ளிகளையும், அங்கித் குமார் 14 புள்ளிகளையும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது தமிழ் தலைவாஸ் அணி. அடுத்ததாக வரும் 11ஆம் தேதி பலம் வாய்ந்த புனேரி பல்தான்ஸை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.