தமிழக இடைக்கால பட்ஜெட்: பெண்களுக்கு ரூ.5,000 – இன்ப அதிர்ச்சியில் உறைந்த தமிழ்நாடு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழக அரசின் முத்திரைத் திட்டங்களில் முதன்மையானது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகத்தான வெற்றியைப் பெற்று வருகிறது. மகாகவி பாரதியின் ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பெருங்கனவை நனவாக்கும் வகையில், மகளிரின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்தம் மாண்பைப் போற்றவும், அவர்களின் நலனைப் பாதுகாக்கவும், தொழில் முனைவோராக உயர்த்தவும் பல முன்னோடித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.தமிழக அரசின் முத்திரைத் திட்டங்களில் முதன்மையானது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இல்லங்களில் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முன்னோடியாகத் திகழ்கிறது. ஏறத்தாழ 1.31 கோடி பயனாளிகள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த மகத்தான திட்டத்தைப் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன என்பது அதன் வெற்றிக்கு சான்றாகும்.எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி இத்தொகை தொடர்ந்து கிடைக்கும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது.கடந்த வெள்ளியன்று வைகறைப் பொழுதில் கதிரவன் உதயமான அதே வேளையில் தொடங்கி, மூன்று மணி நேரத்திற்குள் 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நாடே திரும்பிப் பார்க்கச் செய்தது. மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.

எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளை முன்கூட்டியே கணித்து அவற்றைத் தகர்த்து, குடிமக்களைப் பாதுகாக்கும் உன்னதத் தலைவரை தமிழகம் பெற்றுள்ளது.ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.6,500 கோடி நிதியை தமிழ்நாடு எங்கும் ஏழை எளியோரின் கரங்களில் தவழச் செய்த முதல்வருக்கு மகளிர் சார்பாக நன்றி” என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share