இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில் முன்னேற்றப் பாதையில் உள்ளது.
அந்த வகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து, ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக உருவெடுத்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தமிழ்நாடு 11.2 சதவீத ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியுடன், 2025-ம் நிதியாண்டில் 17.32 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. நாட்டின் மின்னணு ஏற்றுமதி மற்றும் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்ட உற்பத்தி செயல்பாடுகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
வளர்ச்சியில் தமிழகம்
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில்துறை சார்பிலும், அரசு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் இரண்டாம் நிலைத் துறைகளான (Secondary Sector) உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம் உள்ளிட்ட பிற பயன்பாட்டுத் துறைகளில் நிலையான விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதில் 13.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, தேசிய சராசரியை (6.1%) விட இரு மடங்கு அதிகமாக வளர்ந்து முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழகத்தின் இரண்டாம் நிலைத் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு கடந்த 2024ம் நிதியாண்டில் 5.13 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025ல் 5.82 லட்சம் கோடியாக உயர்ந்து 13.4 சதவீத ஆண்டு வளர்ச்சியை அடைந்தது. இது பிற பெரிய மாநிலங்களை விட மிக அதிகம்.
இந்நிலையில், மகாராஷ்டிரா 2025ம் நிதியாண்டில் இரண்டாம் நிலைத் துறையில் மொத்த உற்பத்தி அளவில் முதல் இடத்தில் இருந்தாலும், 5.1 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இரண்டாம் நிலைத் துறையின் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ள நிலையில், 9.5 சதவீத வளர்ச்சியுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா (5.4%) மற்றும் தெலங்கானா (3.7%) போன்ற மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
சேவைத்துறையில் தமிழகத்தின் வளர்ச்சி
இந்நிலையில், மூன்றாம் நிலைத் துறையாகப் பார்க்கப்படும் சேவைத் துறையில் தமிழகம் மீண்டும் முதல் இடத்தில் உள்ளது. 2024ம் நிதியாண்டில் சுமார் 16.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இத்துறையின் உற்பத்தி மதிப்பு, 2025ல் 18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, 11.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.