இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR-க்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை நவம்பர் 16-ந் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை 16.11.2025 காலை 11.00 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தவெக தலைவர் விஜய் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
