தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்து சேவைகள், நவம்பர் 7 இரவு 8 மணி முதல் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கேரளப் போக்குவரத்துத் துறையின் திடீர் நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள், கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக கேரளப் போக்குவரத்துத் துறையினர், தமிழ்நாட்டிலிருந்து கேரளா சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பெர்மிட் இல்லை என்று கூறி சிறைபிடித்து, அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டனர். அதோடு, இந்தப் பேருந்துகளுக்கு 70 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
கேரள அரசின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்டகால நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் கடுமையாகப் பாதிக்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால், ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
குறிப்பாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல பூஜைக்காகச் செல்லத் திட்டமிட்டிருந்த பக்தர்கள் மற்றும் வார இறுதி நாட்களை கேரளாவில் செலவிட திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.
கேரளப் போக்குவரத்துத் துறை ஆம்னி பேருந்துகள் “ஒப்பந்தப் பேருந்து” (Contract Carriage) விதிமுறைகளை மீறியதாகக் கூறி அபராதம் விதித்துள்ளது. அதாவது, ஆம்னி பேருந்துகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், வழியில் தனித்தனி பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் கேரள அரசு வலியுறுத்துகிறது.
ஆனால், ஆம்னி பேருந்துகள் தனித்தனி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த விதிமுறை வேறுபாடுகளே தற்போது சர்ச்சைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தமிழகமும் கேரளப் பதிவு எண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு மாநில அரசுகளுக்குக் கோரிக்கைஇந்த விவகாரத்தில் உடனடியாகத் தமிழக அரசும், கேரள அரசும் தலையிட்டு, சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
