தமிழ்நாட்டின் அமைச்சர்கள் சிலர் சிறை சென்ற பின்னும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று அமித்ஷா கூறியுள்ளார்.
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படட்து. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
எனினும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிச்சயமாக நிறைவேறும் என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி தன்னையும் 130ஆவது சட்டத் திருத்த மசோதாவில் சேர்த்துக்கொண்டுள்ளார். ஆனால் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, 39வது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வந்தார். அந்தப் பிரிவு குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மற்றும் அவைத் தலைவர் ஆகியோர் நீதித்துறை விசாரணையிலிருந்து பாதுகாக்கும் வகையில் இருந்தது. ஆனால் நமது பிரதமர் தனது பதவிக்கு எதிராகவே ஒரு மசோதாவை கொண்டு வந்திருக்கிறார். ஒரு வேளை அவர் சிறை செல்ல நேர்ந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார்” என்றார்.
மேலும் அவர், “சிறையில் இருந்தாலும்அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தொடர்ந்தார். கைதான உடனேயே ராஜினாமா செய்யவில்லை.
ஆனால் இந்தச் சட்டம் அமலில் இருந்திருந்தால், அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்திருக்கும்.. கெஜ்ரிவால் வெளியே வந்த பிறகு பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியபோதுதான் தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அத்வானி ஜி, மதன்லால் குரானா மற்றும் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முதல்வர்) ஆகியோர் ராஜினாமா செய்தனர். ஆனால் தமிழ்நாட்டின் சில அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட பிறகு ராஜினாமா செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சில நாட்கள் அமைச்சர் பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.